5G SIM Card: சிம் கார்டுகளை 5Gக்கு தரம் உயர்த்துவதற்காக போலி அழைப்புகள் வருவதாகவும் அதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 


பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் மிகவும் பிரபலான விசயங்களை மிகவும் சாதகமாக பயன்படுத்தி பொது மக்களின் பணத்தினை திருடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிகப்படியான மக்கள் தங்களின் பணத்தினை பறிகொடுக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது புதிய முறையில்   ஒரு மோசடி கும்பல் பணத்தினை திருடுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  


நாடு முழுவதும்  5G சேவையை இந்தாண்டு முதலே கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் தொடக்கமாக அக்டோபர் மாதத்தின் முதல் தேதியில் பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களான, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் தொடங்கி வைத்தார். மேலும், அதனைத் தொடந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றூம் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தசரா பண்டிகையையொட்டி வாரணாசி பகுதிகளில் 5G சேவையை அறிமுகப்படுத்தியது. அதில் ரிலையன்ஸ்  ஜியோவின் ஒரு நொடிக்கு  1 GB டவுன்லோடு வேகம் இருப்பதாக அறிவித்திருந்தது. 


தற்போது 4G சேவையை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அனைவரையும் 5G சேவையை நோக்கி வரவேற்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருகின்றனர். மேலும், பல்வேறு மொபைல் போன் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்திட்டு வருகின்றனர். 


இந்நிலையில், ஏற்கனவே இரு நிறுவனங்களும் 5G சேவையைப் பயன்படுத்த புதிய சிம் கார்டுகள் வாங்கவோ மாற்றவோ தேவையில்லை. ஏற்கனவே உள்ள சிம் கார்டுகளைக் கொண்டே 5G சேவையை பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி மோசடி கும்பல், 4G வாடிக்கையாளார்களிடம் இருந்து பணம் திருட நூதன முறையினை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அந்த மோசடி கும்பல், 4G வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து, உங்களது சிம் கார்டை 5Gக்கு அப்கிரேடு செய்யவேண்டும் , அதனால் தற்போது உங்களது எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP)  வரும் அதனை சொல்லுங்கள் எனவும் கூறுகிறார்கள். அந்த ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP)  மூலம் வாடிக்கையாளரின் வங்கியில் இருந்து பணம் திருடப்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. 


மேலும், தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், சிம் கார்டை அப்கிரேடு செய்ய அதாவது தரம் உயர்த்த எந்த விதமான ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP)  பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் யாரிடமும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல்லை  (OTP)  பகிர வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளர். 


அதேபோல், 5G தொலை தொடர்பு சார்ந்து பொது மக்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதனை வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை போக்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவது தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் 5G சேவையை கொண்டு வருவதற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கும் போது, அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இன்னும் 4G சேவையையே நாடு முழுவதும் கொண்டு வரமுடியாமல் திணறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.