சென்னையில் 18 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட, வங்கி மோசடி வழக்கில் ஈடுபட்ட மோசடியாளர்களுக்கு, தற்போது கடுங்காவல் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2004-ம் ஆண்டு, பிரபலமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, ஏமாற்றி, கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக , சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.  இந்த மோசடியானது, 1997-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரையிலான  காலக்கட்டத்தில், திட்டமிட்டு சதி செய்து, வங்கியை ஏமாற்றி நடைபெற்றுள்ளது. அதுவும், அந்தக் காலக்கட்டத்தில், 2 கோடியே 60 லட்சம் ரூபாய் வங்கிக்கு இழப்பு ஏற்படும் வகையில் மோசடி நடைபெற்றுள்ளது. 


போலி பில்கள், போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியை ஏமாற்றி, கோடிகளை அபேஸ் செய்துள்ளனர். இதுதொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிபிஐ-யின் பொருளாதார குற்றப்பிரிவின் சார்பில், 2004-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 




அதில், ஜாபருல்லா முதன்மை குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டார். அவருடன், ஹாஜி முகம்மது, தமிழ்ச்செல்வன், ரத்தினகுமார், விஜயகுமார் ஆகிய 4 பேரும் மீதும் மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டது. பிறகு, பல ஆண்டுகள் நடைபெற்ற தொடர் விசாரணையில்,  போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்து, 2 கோடியே 60 லட்சம் மதிப்பிற்கு வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த 5 பேருக்கு எதிராக சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  பல்வேறு காரணங்கள் மற்றும் தொடர் விசாரணையின் காரணமாக, நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த 31-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. 




சென்னைப் பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதின்றத்தில், நீதிபதி கிரிஜா ராணி தீர்ப்பு வழங்கினார்.  இதன்படி, குற்றவாளிகள் ஐந்து பேரில் நான்கு பேருக்கு தலா ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும்  ஒவ்வொருவரும் தலா ரூ.25,000 அபராதம் செலுத்தவேண்டும் என்றும் தவறினால்  ஆறு மாத கடுங்காவல் தண்டனையை கூடுதலாக  அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்தத்தீர்ப்பு குறித்த தகவலை, சென்னையில் உள்ள சிபிஐ- பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 


சென்னையில் 18 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக இந்த வழக்கு அப்போது பேசப்பட்டது. ஆனால் அதன்பின் அடுத்தடுத்த நிகழ்வுகள் மற்றும் காலவோட்டத்தில் இந்த வழக்கையே பொதுமக்களும் ஊடகங்களும் மறந்துவிட்டன. ஆனால், சத்தமில்லாமல் நீண்ட காலமாக நடைபெற்ற வந்த இந்த வழக்கில், வெற்றிகரமாக குற்றத்தை நிருபித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது சிபிஐ என்பது குறிப்பிடத்தக்கது.