விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த அபிராமேஸ்வரர் கோவிலில் நேற்று காலை மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களின் கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் அணிந்திருக்கும் தங்கசங்கிலியை பறிக்கும் நபர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும்படியும், குறிப்பாக நகைகளை பாதுகாக்கும் வண்ணம் சேப்டி பின், பெண் போலீசார் மூலம் வழங்கப்பட்டு தங்க சங்கிலிகளை செப்ட்டிபின் மூலம் புடவையோடு இணைத்துக்கொள்ள அதை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனை மீறியும் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் தங்க சங்கிலியை சில பெண்கள் பறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் சிறிதுநேரம் நோட்டமிட்டு வந்தனர். பின்னர் நகை பறிக்க முயன்ற 3 பெண்களை காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் கணேசன், பாலசிங்கம் மற்றும் போலீசார், கையும், களவுமாக மடக்கிப்பிடித்தனர்.
அவர்களை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் கோவை பாபா கோவில் தெரு பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி காளியம்மாள் (வயது 45), ஜோசப் மனைவி கவிதா (39), ராஜி மனைவி இசக்கியம்மாள் என்கிற மேகலா (38) என்பதும், இவர்கள் கோவில் திருவிழாக்களில் கூட்டாக சேர்ந்து பெண்களிடம் நகையை பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதும், இவர்கள் மீது விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காளியம்மாள் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்