விழுப்புரம் மாவட்டம், மயிலம் கிளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வரவு மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெயகண்ணன். இதே நிறுவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் மாதம் வரை கண்டமங்கலம் அருகே துலுக்கநத்தம் கிராமத்தைச், சேர்ந்த சேகரின் மகன் குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் பணியில் இருந்தபோது, 10.10.2019 அன்று மயிலம் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு டிராக்டர் டிப்பர் வாகனத்திற்கு ரூ.12 லட்சத்திற்கு வாகன கடன் வழங்கியுள்ளார். அந்தக் கடனை பெற்ற ஏழுமலை, சரியாக கடன் தொகையைத் திருப்பி செலுத்தாததால், அவரிடம் சென்று நிதி நிறுவன ஊழியர்கள் கேட்டனர்.


அதற்கு லாரி வாங்கி விற்கும் தொழில் செய்யும் திண்டிவனம் அருகே விநாயகாபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ஏற்கனவே 3 வாகனங்களை விற்றபோது, அவருக்கு பழக்கமான மேலாளர் குமாரும் சேர்ந்து, ஏழுமலை பெயரில் பெற்ற வாகன கடன் தொகை ரூ.12 லட்சத்தை பெற்று, அந்த தொகையை நிதி நிறுவனத்திற்கு செலுத்தாமல், ஈஸ்வரனின் மகன் கோபிகண்ணனின் வங்கி கணக்கிற்கு செலுத்தி, கையாடல் செய்துள்ளார்.


இதுகுறித்து, தற்போதைய கிளை மேலாளரான ஜெயகண்ணன், ஏழுமலையிடம் கேட்டுள்ளார். அதற்கு, தான் முன்னாள் மேலாளர் குமார் மற்றும் அவருக்கு தெரிந்த ஈஸ்வரன், அவரது மகன் கோபிகண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுசதி செய்து, வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை போலியாக தயார் செய்து, தங்கள் நிறுவனத்தை ஏமாற்றிதான் வாகன கடன் ரூ.12 லட்சத்தை பெற்றதாக, ஏழுமலை கூறினார். அப்படியானால், தற்போது அந்த வாகனம் எங்கு உள்ளது என்றும், வாகன கடனை திருப்பி செலுத்தும்படியும் ஜெயகண்ணன் கூறினார்.


அதற்கு கடன் தொகையை செலுத்த முடியாது என்று ஏழுமலை கூறியதோடு, ஜெயகண்ணனை அவர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஜெயகண்ணன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார்புகார்களை ஆன்லைன் செய்தார். அதன்பேரில், ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீதும் துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, குமார், ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.  பின்னர் அவர்கள் 3 பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.