கோவை மாநகரில் சொகுசு காரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான உயர்ரக போதைப்பொருளை கடத்தி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருவதால், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் விடுதிகளிலும், வாடகை அறைகளிலும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து சில மர்ம நபர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்து வருவதாக காவல் துறைக்கு தொடர் புகார்கள் வந்தன.
ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், மாநகரம் முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுகுணாபுரம் சோதனை சாவடி அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி, போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, காருக்குள் 90 கிராம் அளவிலான உயர்ரக போதைப்பொருளான மெத்தபெட்டமைன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக காரை ஓட்டி வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சொகுசு கார் பறிமுதல்
விசாரணையில், அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹஸ்னுல் ரகுமான் என்பது தெரிய வந்தது. மேலும், அவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்பதும், கேரளாவில் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் ஹஸ்னுல் ரகுமானை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.