23 வயதான பிடெக் பட்டதாரி ஒருவர் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியினை போலீஸார் நேற்று (மார்ச் 31) பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தனர். நாட்டில் போதைப் பழக்கம் வெகுவாக அதிகரித்து வருகிறது. மது சிகரெட்டை தாண்டி பலர் வெவ்வேறு பாதைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.


இந்தியாவில் பலதரப்பட்ட போதைப்பொருட்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு எவ்வளவு தீவிரமாக கண்காணித்தாலும், இது போன்ற வினோதமான போதை பொருட்கள் கள்ள சந்தையில் விற்பனை ஆகிக்கொண்டேதான் இருக்கிறது என்பதை நாள்தோறும் செய்திகளில் பார்த்து வருகிறோம். இந்நிலையில், அதிகமான போதை பொருள் பயன்படுத்தி இறந்த நபர் பல விதமான போதைப்பொருட்களுக்கு அடிமை ஆனவர் என்றும், போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் நண்பர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.



பல்வேறு போதைப் பொருட்களை விற்பனை செய்ய முயன்ற போது இன்று சிலர் பிடிபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரியல் எஸ்டேட் வியாபாரி ஒருவர், ஒரு மென்பொருள் ஊழியர், ஒரு கிட்டார் ஆசிரியர் மற்றும் ஒரு பொறியியல் மாணவர் ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூடுதல் ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டிஎஸ் சவுகான் தெரிவித்தார். குற்றவாளிகளிடம் இருந்து 6 எல்எஸ்டி ப்ளாட்கள், 10 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 100 கிராம் ஹாஷ் ஆயில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலிசாரின் கூற்றுப்படி, இறந்தவர் ஒரு வேலையற்ற பிடெக் பட்டதாரி என்று தெரிய வந்துள்ளது. பல்வேறு போதைப்பொருட்களை உட்கொண்டு அவற்றுக்கு முற்றிலும் அடிமையாக இருந்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி கோவாவுக்குச் செல்வது அவரை பல்வேறு போதைப்பொருட்களை முயற்சிக்க வைத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.



அந்த நபர் சமீபத்தில் ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும், போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் அவர் சிகிச்சையின் போது மூன்று நாட்களுக்கு முன்பு இறந்ததாகவும் மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இறந்த நபர், நடைபாதை வியாபாரி மற்றும் சிலருடன் அடிக்கடி கோவாவுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவர் எல்.எஸ்.டி, மாத்திரைகள், கோக்கெயின், எம்.டி.எம்.ஏ மற்றும் ஹாஷ் ஆயில் போன்ற பல போதைப்பொருட்களை உட்கொண்டதாக காவல்துறை மேலும் கூறியது.


எல்.எஸ்.டி (லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு) மாத்திரைகள் மற்றும் திரவ வடிவில் விற்கப்படுகிறது, மேலும் இது மிகவும் ஆற்றல் வாய்ந்த 'மனநிலையை மாற்றும்' இரசாயனங்களில் ஒன்றாக அறியப்படுகிறது, அதே சமயம் எம்.டி.எம்.ஏ. வும் அதே போன்று மிகவும் சக்தி வாய்ந்த போதை பொருளாக அறியப்படுகிறது.