போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக்:


இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் தியானேஷ்வர் சிங், "உணவு பொருள் என்ற பெயரில் சூடோபெட்ரின் என்ற போதை பொருளை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கும்பல் கடத்தியுள்ளது. அந்த கும்பலுக்கு ஜாபர் சாதிக்தான் இயக்கியுள்ளார்.


இவரால் இயக்கப்படும் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் 45 தளவாடங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருளை அனுப்பியுள்ளதாக நம்பப்படுகிறது. இதில் சுமார் 3500 கிலோகிராம் சூடோபெட்ரின் (போதைப்பொருள்) உள்ளது.


ஒப்புதல் வாக்குமூலத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்:


ஜாபர் சாதிக் தனது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து பெரும் பணத்தை சம்பாதித்ததாகவும், அந்த பணத்தை திரைப்படம், கட்டுமானம், ஓட்டல் போன்ற தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் ஒப்பு கொண்டுள்ளார்.


போதைப்பொருள் கடத்தல் தொடர்பான அவரது நிதி தொடர்புகள், அவரது நிதி ஆதாரங்கள் மற்றும் போதைப்பொருள் வருமானத்தில் பயன் அடைந்தவர்களை அடையாளம் காண விசாரித்து வருகிறோம். விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன, மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.


சமீபத்தில் டெல்லியில் ரூ.75 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும்  மேற்கொண்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


நடிகர் அமீரிடம் விசாரணை நடத்தப்படுமா?


கடந்த 3 ஆண்டுகளாகவே இவர்கள் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புக் கொண்ட போதைப் பொருளை உணவுப்பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. 


இந்த கும்பலுக்கு தலைவனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் செயல்பட்டதும் போலீசார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த ஜாஃபர் சாதிக் கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை படத்தின் தயாரிப்பாளர் ஆவார். அதேபோல் அமீர் நடித்து வரும் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். ஜாபர் சாதிக் கைதை தொடர்ந்து, நடிகர் அமீரிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.


இதையும் படிக்க: Manjummal Boys: குடிப்பொறுக்கிகளை கொண்டாடும் நம்மூர் அரைவேக்காடுகள்; மஞ்சும்மல் பாய்ஸை வறுத்தெடுத்த ஜெயமோகன்!