என்கவுண்டர் அச்சத்தால் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது : ரவுடியின் மனைவி தனது கணவனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் போலீசாரே காரணம் என வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
சென்னை புறநகரில் ரவுடி சாம்ராஜ்யம்..
சென்னை புறநகர் பகுதிகளில் அதிக வளர்ச்சியை நோக்கி பயணிப்பதால், பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை மையமாக வைத்து பணம் பறிக்கும் நோக்குடன் பல ரவுடி கும்பல்கள் உருவாகி உள்ளன. ரவுடி கும்பல்களை அடக்குகிறோம் என போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளும், போதுமானதாக இல்லை. இதனால் அனைத்து பகுதிகளிலும் குட்டி ரவுடிகளில் தொடங்கி ஏ ப்ளஸ் ரவுடிகள் வரை வளர்ந்து வருகின்றனர். ரவுடிகள் வளர்வதற்கு காவல்துறை தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் நீண்ட காலமாக இறந்து வருகின்றன. அவ்வப்பொழுது தனி படை மற்றும் சிறப்பு படை அமைப்பதும், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த சிறப்பு படை செயல்படாமல் போவதும் தொடர்கதை ஆகியுள்ளது.
விஷ்வாவின் கூட்டாளி
இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்துரு (24) பாலச்சந்தர் (22). இருவரும் சகோதரர்கள். இருவர் மீதும் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் போன்ற குற்ற வழக்குகள் இவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ளன. மேலும் இரண்டு பேரும் பிரபல ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியாக இருந்து வந்த விஷ்வாவின் கூட்டாளிகளாக இருந்து கொண்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இரும்பு கழிவுகளை ஒப்பந்தம்
இந்தநிலையில் இங்கு உள்ள தனியார் ஆலைகளில் இருந்து ஸ்கிராப் எனப்படும் இரும்பு கழிவுகளை ஒப்பந்தம் எடுப்பதில் முக்கிய புள்ளிகள் இடையே தொழில் போட்டி நிலவுகிறது. தொழிலதிபர்கள் , அரசியல் கட்சி பிரமுகர்களை கொலை செய்வதில் கூலிப்படைகளாக இருந்து வந்தனர். ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் நடகும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த தனிப்படை போலீசார் தீவிரமாக ரவுடிகளை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
ரவுடி விஷ்வா மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு
அப்போது கடந்த ஆண்டு 9-ஆம் மாதம் பிரபல ரவுடி விஷ்வா சுங்குவார்சத்திரம் அருகே பதுங்கி இருந்தபோது போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய ரவுடி விஷ்வா மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் இறந்து போனார். என்கவுண்டர் அச்சத்தால் விஷ்வாவின் கூட்டாளிகளான சந்துரு, பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் தலைமறைவாகினர்.
தனிப்படை போலீசார்
இதற்கிடையே தொழில் போட்டியால் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் ரமேஷ் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக அரக்கோணம் அருகே தலைமறைவாக இருந்த சந்துரு பாலச்சந்தர் ஆகிய இரண்டு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ
இதற்கிடையே சந்துருவின் மனைவி தனது கணவனுக்கும், மைத்துனருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி, மற்றும் மாவட்ட எஸ்.பி தான் பொறுப்பு என வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.