பெங்களூரு ஜலதர்சினி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 50). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலம் வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வந்தார். குணசீலத்தில் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் அருகில் இருந்த காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி, தனிப்பிரிவு போலீஸ்காரர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைப்பையில் 4 விலை உயர்ந்த செல்போன்கள், நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் திருட்டுபோன செல்போனில் டிராக்கிங் டிவைஸ் செல்போன் செயலி உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த செயலியை பயன்படுத்திய போலீசார் திருட்டுபோன செல்போன் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதை கண்டுபிடித்தனர். அப்பகுதியில் போலீசார் சென்று பார்த்தபோது, காரில் இருந்து திருடப்பட்ட கைப்பை வாத்தலை காத்தான்கோவில் சுற்றுச்சுவர் அருகே கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை கைப்பற்றிய போலீசார் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அதில் செல்போன், நகை மற்றும் பணம் ஆகியவை இருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்த சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். 




மேலும் திருச்சி மாநகரில் பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முதலியார் சத்திரத்தை சேர்ந்த ஆரோக்கியசெல்வகுமார் (20), காஜாபேட்டை பசுமரத்தை சேர்ந்த ஆரிப்கான் (19) ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண