ஆப்பிரிக்க நாட்டில் இருந்து, ரூ. 4 கோடி மதிப்புடைய, 2 கிலோ "ஆம்பெடமைன்" போதைப் பொருளை கடத்தி வந்த, மேற்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியை, சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறையினர் கைது செய்து, போதை பொருளை பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

 

சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் 

 

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடீஸ் அபாபாவிலிருந்து,எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம்  வந்தது.அதில் வந்த  பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த விமானத்தில், மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள, ஐவரி கோஸ்ட் நாட்டின் அபிஜான் பகுதியில் இருந்து,கவுடியோ அடிங்ரா இம்மானுவேல் என்ற 32 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு வந்திருந்தார். அந்தப் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் கூறிய பதில்கள், அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

ஆடைகளுக்குள் ஒரு பார்சல்

 

இதை அடுத்து அந்தப் பயணியை வெளியில் விடாமல், தனி அறைக்கு அழைத்து சென்று, அவருடைய உடமைகளை முழுமையாக பரிசோதித்தனர். அதோடு அவருடைய உள்ளாடைகளையும் சோதித்தனர். ஆடைகளுக்குள் ஒரு பார்சல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். அதை வெளியில் எடுத்துப் பார்த்தபோது, அது வெளிர் வெள்ளை நிறத்தில், ஒரு விதமான பவுடர் இருந்தது. அந்தப் பவுடர் குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்துவது என்று அந்தப் பயணி கூறினார். ஆனால் சுங்க அதிகாரிகள் அதை நம்பாமல், அந்த பவுடரில், சிறிதளவு சாம்பிள் எடுத்து பரிசோதனை கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி னர். அங்கிருந்து வந்த பரிசோதனை முடிவில், அது ஆம்பெடமைன்  என்ற, விலை  உயர்ந்த போதை பவுடர் என்று தெரிய வந்தது.

 

 ஆம்பெடமைன் போதைப் பொருள்

 

இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்தப் மேற்கு ஆப்பிரிக்க நாட்டு பயணியான கவுடியோ அடிங்ரா இம்மானுவேலை கைது செய்தனர். அதோடு அவரிடம் இருந்த 2  கிலோ எடை உடைய ஆம்பெடமைன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 4 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு கைது செய்யப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பயணியை, தொடர்ந்து விசாரணை நடத்துகையில், ஏற்கனவே இவர் சில முறை இதை போல் சுற்றுலா பயணிகள் விசாவில், இந்தியாவிற்கு வந்து சென்று தெரிய வந்தது. மேலும் இவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலில், கூலிக்காக போதைப்பொருட்களை கடத்துபவர் என்றும் தெரிகிறது. இவர் சென்னையில் இந்த போதை பொருளை யாரிடம் கொடுக்க எடுத்து வந்தார். சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள், சென்னையில் யார்? செயல்படுகின்றனர்,என்று தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.