சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் 16 வயது சிறுமி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 15 ஆம் தேதி மாலை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி அருகே சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதேபோல் ஜூன் 19 ஆம் தேதி ஓய்வு பெற்ற அரசு ஊழியரான 62 வயது மூதாட்டியின் செல்போன் அதே இடத்தில் பறிக்கப்பட்டது. இதேபோல் அடுத்தடுத்த நாட்களில் தனியாக நடந்து சென்ற பெண்கள் மற்றும் முதியவர்களிடம் மயிலாப்பூர், அபிராமபுரம், ராயப்பேட்டை பகுதிகளில் வைத்து செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து ராயப்பேட்டை, அபிராமபுரம், மயிலாப்பூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பைக்கில் வந்த ஆணும், பெண்ணும் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் ஊழியர்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளது. இந்த 2 சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்கள் தான் என கண்டுபிடித்த ராயப்பேட்டை போலீசார் பைக்கின் எண்ணை வைத்து சோதனை செய்ததில் 16 வயது சிறுமி உட்பட 4 பேரை கைது செய்தனர்.
அவர்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தேனாம்பேட்டை எஸ்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த விவேக் (எ) குள்ளா, மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டி தொழில் செய்து வரும் ஜெகன், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன், தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணப் பெருமாள் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த கும்பலுக்கு அச்சிறுமி தான் மூளையாக செயல்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் முதல் நாளே எங்கெங்கு திருட்டில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட திட்டங்களை கச்சிதமாக வகுத்து கொடுப்பாராம்.
பள்ளிச் செல்லும் போதே கஞ்சா பழக்கத்துக்கு அச்சிறுமி அடிமையானதால் அவரை பெற்றோர் வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். பின்னர் உறவினரான சரவணப் பெருமாள் அவரை அழைத்துக் கொண்டு சென்னை வந்துள்ளார். அப்போது கஞ்சாவுக்கு அடிமையான விவேக்குடன் சேர்ந்த பின் திருவல்லிகேணியில் உள்ள லாட்ஜில் அறை தங்கியுள்ளார். மேலும் பறிக்கப்பட்ட செல்போன்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் தன் பங்கு பணத்தை பள்ளி செல்லும் தனது தங்கைக்கு வழங்கி வருவதாகவும், அவரை டாக்டர் ஆக்குவதே லட்சியம் எனவும் அச்சிறுமி போலீசார் விசாரணையில் கூறியுள்ளார்.
இந்த கும்பலிடம் இருந்து 166 செல்போன்கள், ஒரு ஆப்பிள் ஐபேடு, 2 பைக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சிறு வயதிலேயே கஞ்சாவுக்கு அடிமையான 16 வயது சிறுமி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைதானது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்