அரசு பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 11ம் வகுப்பு மாணவர் பலி - நாமக்கல்லில் சோகம்.

அரசுப் பள்ளியில் இரண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் பதினோராம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

நாமக்கல் மாவட்டம் வரகூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நவலப்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளியில் நேற்று மாலை ஆகாஷ் மற்றும் அவரது வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பின்னர் சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

இந்த சண்டையில் ஆகாசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஆகாஷ் உடனடியாக பள்ளியிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆகாசை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் எருமப்பட்டி காவல்துறையினர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில், நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் புஷ்ப ராஜன், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அனைத்து மாணவர்களும் பள்ளியில் உள்ள மைதானத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி அனைத்து மாணவர்களும் பள்ளியின் வகுப்பறையில் இருந்து மைதானத்திற்கு வந்து கொண்டுள்ளனர். அப்போது ஆகாஷ் வகுப்பிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது வகுப்பறையின் வாசலில் விடப்பட்டிருந்த அவரது செருப்பை காணவில்லை. இதனால் கோபமடைந்த ஆகாஷ், தனது செருப்பை யார் எடுத்து ஒளித்து வைத்தது என திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு ஆகாஷ் வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவர் நான் தான் செருப்பை எடுத்து ஒழித்து வைத்துள்ளதாகவும், எதற்கு திட்டுகிறாய் என கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென இருவரும் அடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் அடித்துக் கொண்டதில் ஆகாஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆகாஷ் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆகாஷை தாக்கிய மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப் பள்ளியில் இரண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் பதினோராம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola