கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நான்கு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

குனியமுத்தூரில் போலீஸ் சோதனை

கோவை மாநகர காவல்துறையினருக்கு, குனியமுத்தூர் – இடையர்பாளையம் சாலையில் உள்ள கருவேப்பிலை தோட்டம் அருகே அமைந்துள்ள ஒரு பழைய குடோனில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

Continues below advertisement

சோதனையின் போது, தனியாருக்கு சொந்தமான பழைய கார் உதிரிபாகங்கள் வைக்கும் குடோனில் சந்தேகத்திற்கிடமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 100 கிலோ அளவிலான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் கோவையைச் சேர்ந்த அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவ்பில் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கஞ்சா கோவைக்கு எங்கு இருந்து கொண்டு வரப்பட்டது, ஆந்திரா அல்லது பிற வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்பட்டதா, இதற்கு பின்னால் பெரிய கும்பல் செயல்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகில் இவ்வளவு பெரிய அளவில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.