உத்தரப்பிரதேசத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிற்கு கணவர் தீ வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரப்பிரதேச மாநிலம் லோனி எல்லைப் பகுதியில் உள்ள திலக் நகர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ரிது என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் சமீபகாலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம் சுரேஷ் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசிக்கும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் ரிது குற்றம்சாட்டி அவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 


இதனிடையே சுரேஷை ரிதுவின் உறவினர்களும் கண்டித்த நிலையில் நேற்றைய தினம் வீட்டில் இருந்த சுரேஷூடன் அவரின் மனைவி ரிது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் உடனடியாக எரிந்துக் கொண்டிருந்த கேஸ் அடுப்பை அணைத்து விட்டு அதன் சிலிண்டரை குழாயை அடுப்பிலிருந்து வெளியே எடுத்துள்ளார். 


அதிலிருந்து வெளியேறிய கேஸ் வாயு அறை முழுவதும் எரிவாயு பரவத்தொடங்கியது. இதையடுத்து மூச்சுவிட திணறிய ரிது உதவிக்காக கூச்சலிட்டார். ரிதுவின் சத்தம் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ரிதுவை வெளியேற்றி வாயுவை குறைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் சுரேஷ் லைட்டரை பயன்படுத்தி வீட்டிற்கு தீ வைத்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் வீட்டில்  தீப்பிடித்து வேகமாக பரவ தொடங்கியது. 


இந்த தீ விபத்தில் சுரேஷ், அவரது மனைவி, குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உட்பட 10 பேர் தீக்காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திலக் நகர் எல்லைக்குட்பட்ட போலீசார் ரிது அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் எழுத்துப்பூர்வ புகார் பெறப்பட்டு அதன்பின்னர் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.