மேலூர் அருகே திருமணமாகி 10 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு உயிரிழப்பு: மகளின் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பெண்ணின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் - புகாரின் பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
திருமணம் நடந்து சில நாட்கள்
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைப்பட்டி - லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த ’மதி - ராதா’ தம்பதிகளின் 2-வது மகளான சினேகாவை (19), மேலூர் அருகே கோவில்பட்டியைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு கடந்த 22-ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், பழ வியாபாரம் செய்து வரும் மகேஷ், தனது மனைவி சினேகா மற்றும் மகேஷின் தாயுடன் அவர்களுக்கு சொந்தமான கோவில்பட்டியில் உள்ள புதிய வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 28 -ம் தேதி புதுமண தம்பதிகள் பெண்ணின் வீட்டிற்கு மறு வீடு விருந்துக்கு வந்து விட்டு கடந்த 1 -ம் தேதி திரும்பதி உள்ளனர். இந்நிலையில், பழ வியாபாரம் செய்வதற்காக மகேஷ், அவரது தாயுடன் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சினேகா யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து, வீட்டிற்கு வந்த மகேஷ் நீண்ட நேரமாக வீட்டின் கதவை தட்டிய நிலையில், கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்தபோது அவர் தூக்கு மாட்டிய நிலையில் சுய நினைவின்றி இருந்துள்ளார்.
10 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
இதையடுத்து, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சினேகாவை மீட்டு, தனியார் வாகனம் மூலம் மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சினேகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சினேகாவின் உடல் மகேஷின் வீட்டிற்க்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், இதுகுறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறை (பொறுப்பு) துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையிலான காவல்துறையினர் சினேகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சினேகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை மதி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
உதவி மையம்
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)