பிரபல ஆன்லைன் உணவு நிறுவனமான சொமாட்டோ 2021-22 நிதியாண்டின் காலாண்டு அறிக்கையை அறிவித்துள்ளது. இதன்படி அந்த நிறுவனத்தின் மொத்த காலாண்டு இழப்பீடு 356 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதன் இழப்பீடு 99.8 கோடி ரூபாயாக இருந்தது. பங்குச்சந்தையில் கடந்த மாதம் தான் சொமாட்டோ காலடி எடுத்துவைத்திருந்த நிலையில் தற்போது இந்த இழப்பீட்டு சரிவு குறித்து அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் புதிதாகப் பட்டியிலிடப்பட்டுள்ள சொமாட்டோ நிறுவனம் தனது முதல் காலாண்டில் 844 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அந்த நிறுவனம் 266 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. பெருந்தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக உணவு டெலிவரி பிசினஸ் மேற்கொண்டதுதான் இந்த வருவாய்க்குக் காரணம் என்றும் அதே சமயம் 2021-2022ம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் கொரோனா பிசினஸை மிகவும் பாதித்துவிட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. அதிக இழப்பீட்டுக்கு இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏப்ரல் - ஜூன் காலக்கட்டத்தில் மட்டும் அந்த நிறுவனம் 1259 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. நிறுவனத்தின் ஜனவரி- மார்ச் மாத காலாண்டு வளர்ச்சி 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சொமாட்டோவின் இந்திய விநியோகச் சந்தை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்தாலும் இங்கே பிசினஸுக்கான சூழல் லாக்டவுன் காரணமாக பண விரயமானதாக இருப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சொமாட்டோவின் இந்த இழப்பீட்டு அறிவிப்பால் பங்குச்சந்தையின் சொமாட்டோவின் பங்குகள் விலை 4.22 சதவிகிதம் குறைந்து ஒரு பங்கின் விலை 124.95 ரூபாய் என இருந்தது.






முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஃபுட் பாண்டா நிறுவனம் ஓலா கார் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. நிறுவனம். டேஸ்டி கானா நிறுவனம் மொத்தமாகவே இழுத்து மூடப்பட்டது. ஓலா நிறுவனம் தொடக்கத்தில் கொண்டுவந்த உணவு டெலிவரியும் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  இதற்கிடையே சொமாட்டோவின் இந்தச் சரிவு ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.