இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமான சோமாட்டோ தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்து வருகிறது. ஜனவரி 21ந் தேதியான இன்று சந்தை மூடிய நேர நிலவரப்படி மொத்தமாக 15 சதவிகிதம் வரை சரிவினைச் சந்தித்து இருந்தது. இதனால் அந்த நிறுவன முதலீட்டாளர்களின் சொத்தில் சுமார் 15, 624 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.






இன்றைய தேதிப்படி சோமாட்டோ நிறுவனத்தின் பங்கு  ஒன்றின் விலை ரூ.114.10. இது நேற்றை விட 8.9 சதவிகிதம் வரையிலான சரிவு. இன்றைய பங்குச் சந்தை 59,037.18 புள்ளிகளுடன் 0.72 சதவிகித சரிவில் நிறைவடைந்தது. சோமாட்டோ நிறுவனம் கடந்த ஜூலை 2021ல் தான் பங்குச் சந்தை பங்கு விற்பனையில் தடம் பதிக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் பங்கு ஒன்றின் விலை ரூபாய் 76க்கு விற்கப்பட்டது. 


அன்று தொடங்கியே சோமாட்டோ பங்குகள் முதலீட்டாளர்களின் ஆதரவுக்குப் பாத்திரமாக இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது கடந்த ஜனவரி 17  தொடங்கி சோமாட்டோ பங்கில் சரிவினை சந்தித்து வருகிறது. 


அதன்படி இன்று தொடக்கநிலையில் அறிவித்த விலையை விடக் குறைவான விலைக்கு விற்பனை ஆனது.






கடந்த அக்டோபரில் பங்குச் சந்தையில் தடம்பதித்த பேடிஎம் பங்குகளும் அண்மையில் சரிவினைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் முதலீட்டாளர்கள் ஐபிஓ வெளியிட்ட நிறுவனங்கள் இதுபோன்று தொடர் சரிவுகளைச் சந்திக்குமா என்கிற குழப்பத்திலும் கவலையிலும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.