சமீபத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமீரக நாடுகளில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், லூலூ குழுமத்தினருடனான ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் பலரும் லூலூ குழுமத்தின் நிறுவனர் யூசுப் அலி குறித்து தேடி தெரிந்து வருகின்றனர். அவரைப் பற்றி இங்கே தகவல்களை அளித்துள்ளோம்.. 


இந்தியாவில் பிறந்த எம்.ஏ.யூசுப் அலி சில்லறை வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவராக கருதப்படுகிறார். அபு தாபியில் தனது நிறுவனத்தைத் தொடங்கிய யூசுப் அலி தற்போது உலகம் முழுவதும் 37 நாடுகளில் கிளைகள் வைத்திருப்பதுடன், சுமார் 50 ஆயிரம் பேருக்கும் மேல் வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளார். அவருடைய நிறுவனங்களின் பணியாளர்களுள் பெரும் பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவுக்கு வெளியில் வாழும் இந்தியர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்யும் நோக்கில், யூசுப் அலி இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 32,900 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. 



1955ஆம் ஆண்டு கேரள மாநிலம் திரிச்சூரில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தார் யூசுப் அலி. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அவரது தந்தை மளிகை கடை ஒன்றை நடத்திவர, தனது பெரியப்பாவினால் வளர்க்கப்பட்டார் யூசுப் அலி. தனது 15வது வயதில் அகமதாபாத்தில் தந்தையின் வியாபாரத்தில் பங்கேற்கத் தொடங்கிய யூசுப் அலி, அபு தாபியில் இருந்த தனது உறவினரின் மளிகை கடையில் பணியாற்றுவதற்காக சிறுக சிறுக பணம் சேமித்து, தனது 18வது வயதில், 1973ஆம் ஆண்டில் யூசுப் அலி அபு தாபி சென்றார்.  


தான் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, மக்கள் எதை விரும்பி வாங்குகிறார்கள், எதை வாங்காமல் இருக்கிறார்கள் முதலானவற்றைக் கவனித்து அறிந்து கொண்ட யூசுப் அலி, படிப்படியாக சூப்பர்மார்க்கெட் வியாபாரம் குறித்து கவனம் செலுத்த தொடங்கினார். தனது இளமைக் காலத்தில் ஆஸ்திரேலியா, ஹாங் காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சென்று, அவர் வியாபாரம் கற்றார்.  தனது 34வது வயதில் அபு தாபியில் சூப்பர்மார்க்கெட் ஒன்றைத் தொடங்க, அது வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. 90களில் வளைகுடா போர்க் காலத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் சூழலில், அங்கேயே இருந்து பணியைத் தொடர்ந்தார் யூசுப் அலி. 



போர்க் காலத்தில் 1995ஆம் ஆண்டில் அபு தாபியின் மிகப்பெரிய சூப்பர்மார்க்கெட்டைத் தொடங்கினார் யூசுப் அலி. மேலும், அத்தகைய முதலீட்டில், அவரது சூப்பர்மார்க்கெட்டின் விளம்பரங்கள், `நாம் நம்பிக்கை கொள்ளும் மனிதர்கள்’ என்ற பொருளில் கூறப்பட்டிருக்க, அது அந்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. யூசுப் அலிக்கு அபு தாபி மன்னர் அழைப்பு விடுத்து, அவரது வியாபாரம் குறித்து கேள்வி எழுப்ப, அவர் தனது கனவையும், அபு தாபி மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் குறித்து விளக்கியுள்ளர். இது அரபு நாடுகளின் அதிகாரிகளின் நம்பிக்கையை ஈட்டியதுடன், அந்நாட்டின் அரசுக்கும் நம்பிக்கை விதைத்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து, அவரது வியாபாரத்தின் வெற்றி உலகம் முழுவதும் அவரது சூப்பர்மார்க்கெட் கிளைகளாக, வெற்றிக்கான ஆதாரங்களாக உருவாகி நிற்கின்றன.