நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதுதான் தற்போது விவாதமாக மாறி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்னும் காரை 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார். இறக்குமதி வரியை செலுத்திவிட்டார். இருந்தாலும் ஒவ்வொரு பொருளும் மாநிலங்களுக்குள் நுழையும் போது நுழைவு வரி செலுத்த வேண்டும்.
இறக்குமதி வரி என்பது மத்திய அரசுக்கு செலுத்தும் வரி. வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்கான வரி இறக்குமதி. ஆனால் நுழைவு வரி என்பது (எண்ட்ரி டாக்ஸ்) மாநிலங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி. உதாரணத்துக்கு எதாவது ஒரு துறைமுகத்தில் இருந்து தமிழகத்துக்குள் வருவதற்கு செலுத்தப்பட வேண்டிய வரி. இந்த வரியில் இருந்து விலக்கு தேவை என நடிகர் விஜய் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் மீதான தீர்ப்புதான் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஒரு லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், அந்த அபராதத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு இரு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள நுழைவு வரியை (ஏற்கெனவே 20 சதவீத நுழைவு வரியை செலுத்திவிட்டார்) விஜய் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
தற்போது நுழைவு வரி என்னும் வரி விகிதமே கிடையாது. 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து வரி விகிதங்களும் ஜிஎஸ்டி வரியுடன் இணைக்கப்பட்டுவிட்டன.
இந்த வழக்கில் சில புரிதல்கள்
· பொதுவெளியில் விவாதிக்கப்படுவது போல விஜய் வரி ஏய்ப்பு செய்யவில்லை. இறக்குமதி வரி செலுத்திவிட்டார். ஆனால் தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு வரி செலுத்தவில்லை.
· வரி விகிதங்கள் ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் போது அதில் வரி விலக்கு கேட்பது ஏற்புடையது அல்ல. இதுபோல ஒவ்வொருவரும் வரி விலக்கு கேட்டு வழக்கு தொடுத்தால் மாநிலத்தை நடத்த முடியாது. நான் வருமான வரி செலுத்துவேன் ஆனார் சர்சாஜ் செலுத்த மாட்டேன் என்று சொல்வதுபோலதான் இறக்குமதி வரி செலுத்துவேன் ஆனால் நுழைவு வரி செலுத்த மாட்டேன் என்று சொல்வது. அதனால் விஜய் வழக்கு தொடுத்ததில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்பதே ஆடிட்டர்களின் கருத்தாக இருக்கிறது.
· நீதிமன்றம் அபராதம் விதித்ததோ அல்லது மீதமுள்ள வரியை செலுத்த சொல்லியதிலோ எந்த தவறும் கிடையாது. ஆனால் அதில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நீண்ட விளக்கம் கொடுத்திருக்க வேண்டுமா?
· சச்சினுக்கு பெராரி கார், மைக்கேல் ஷூமேக்கரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதனால் இறக்குமதி வரியில் (ரூ.1.5 கோடி) விலக்கு அளிக்கப்பட்டது.