கிரிப்டோகரன்ஸிகளுக்கான 30 சதவீத வரியை முக்கியமான அறிவிப்பாக பலரும் கருதுகின்றனர். ஒரு தரப்பினர் கிரிப்டோவுக்கு அதிகபட்ச வரி விதிப்பு இருப்பதால் கிரிப்டோவில் செல்லும் முதலீடு குறையும் என கருதுகின்றனர். ஆனால் கிரிப்டோகரன்ஸி தரப்பினர், வரி விதிப்பு மூலமாக அரசு கிரிப்டோ முதலீடுகளை அங்கிகரித்திருக்கிறது என உற்சாகம் அடைந்திருக்கின்றனர். இதன் மூலம் பல கிரிப்டோ கரன்ஸிகள் உருவாகும் என என்னும் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.


இந்த துறையினர் என்ன சொல்லுகிறார்கள் என்பதை விட, சமீபத்திய அறிவிப்பு என்ன என்பதை பார்த்துவிடுவோம்.




கிரிப்டோ சொத்துகள் மீது கிடைக்கும் லாபத்துக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இதர சொத்துகளில் மூலம் நஷ்டங்களை இதில் கிடைக்கும் லாபத்துடன் சரி கட்ட முடியாது. உதாரணத்துக்கு இரு  பங்குகளில் முதலீடு செய்கிறார். ஒரு பங்கில் லாபம் கிடைக்கிறது. அதேபோல மற்றொரு பங்கில் நஷ்டம் வருகிறது என்னும் பட்சத்தில் நிகர லாபத்துக்கு மட்டுமே வரி செலுத்தினால் போதுமானது. ஆனால் கிரிப்டோவில் கிடைக்கும் லாபத்துக்கு 30 சதவீத வரி செலுத்தியாக வேண்டும். இதர முதலீட்டில் கிடைக்கும் நஷ்டத்துடன் சரி கட்ட முடியாது. அதேபோல கிரிப்டோ பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும். மேலும் கிரிப்டோ கரன்ஸியை பரிசாக வழங்கும் பட்சத்தில், இந்த பரிசை பெறுபவர் பரிசை பெறுபவர் வரி செலுத்த வேண்டும்.


இதற்காக விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம். இருந்தாலும் அதற்கு முன்பு இந்த சொத்தில் லாபம் அடையும் முதலீட்டாளர்களுக்கு வரி வசூலிக்க வேண்டும் என நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.


இந்தியாவில் சுமார் 2 கோடி கிரிப்டோ கரன்ஸி முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். சுமார் 40000 கோடி ரூபாய் அளவுக்கு கிரிப்டோகரன்ஸியில் முதலீடு இருக்கும் என தெரிகிறது.


இது தொடர்பாக ஜெரோதா நிறுவனத்தின் நிறுவனர் நிதின் காமத் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. கிர்ப்டோவை ஒரு கரன்ஸியாக அல்லாமல் அதனை ஒரு சொத்தமாக மட்டுமே அரசு அங்கிகரிப்பது வரவேற்கத்தக்கது. அதனால் டிமேட் கணக்கில் பங்குகள் இருப்பதுபோல கிரிப்டோ முதலிடும் இருக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்.


இது தொடர்பாக பிஎம்எஸ் பஸார் நிறுவனத்தின் நிறுவனர் பல்லவராஜனிடம் பேசினோம். இது தொடர்பாக விரிவாக பேசினார். ஒரு முதலீட்டாளர்களின் முக்கியமான விஷயம் லாபம். லாபத்துக்காகதான் முதலீடு செய்கிறார்கள். தற்போது பங்குகளை விட இரு மடங்குக்கு மேல் வரி இருப்பதால், கிரிப்டோவில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் முதலீட்டாளர்களுக்கு இருக்கும்.




பங்குச்சந்தையை விட இரு மடங்குக்கு மேல் லாபம் கிடைத்தால்தான் கிரிப்டோ முதலீடு பயனுள்ளதாக இருக்கும். இல்லையெனில் வரி அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும். அதனால் கிரிப்டோவில் இருந்து பங்குச்சந்தை உள்ளிட்ட இதர முதலீட்டுகளுக்கு மாறும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி முதலீடு அடுத்த சொத்துகளுக்கு மாறும் பட்சத்தில் கிரிப்டோ மூலம் கிடைக்கும் வருமானமும், அதன் மீதான ஈர்ப்பும் குறைய வாய்ப்பு இருக்கிறது என பல்லவராஜன் தெரிவித்தார். லாபம் சம்பாதிக்க முடியாத அல்லது போதுமான அளவுக்கு லாபத்தை வெளியே எடுக்க முடியாத முதலீடு வளர்வதற்கான வாய்ப்பு குறைவு என்றார்.


இது பொன்ஸி திட்டமா?


ஒரு முதலீட்டின் மீது எந்த வருமானமும் இருக்காது. அடுத்து வரும் முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று முந்தைய முதலீட்டாளர்களுக்கு கொடுப்பத்துதான் பொன்ஸி திட்டம் என அழைக்கலாம்.


இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இதனை பொன்ஸி திட்டம் என பல அறிஞர்கள் கூறுகின்றனர். இதனை கரன்ஸி என்பதை ஏற்க முடியாது. இது ஒரு யூகம் ஒரு விளையாட்டு.  ஒரு கிரிப்டோவில் முதலீடு செய்கிறோம். பிடிக்கவில்லை என்றால் வேறு கிரிப்டோ முதலீட்டை உருவாக்கிக்கொள்ள முடியும். இதனை எப்படி கரன்ஸி என அழைக்க முடியும் என சர்வதேச அளவில் கேள்விகள் எழுகின்றன.




கிரிப்டோகளை பணவீக்கத்துக்கு மாற்றாக பல முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். பணவீக்கத்துக்கும் கிரிப்டோவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்று இருக்கும் ஒரு கிரிப்டோ நாளை இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதால் பணவீக்கத்துக்கு எதிரான முதலீடு என ஒப்பிட்டு முதலீடு செய்ய  வேண்டாம் என சர்வதேச அளவில் பல வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


வரி அறிவிப்பை அங்கீகாரமாக கருத வேண்டுமா அல்லது வளர்ச்சிக்கான தடையாக கருத வேண்டுமா? என்பதெல்லாம் அந்த துறையினருக்கானது. ஆனால் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் களம்.