விஸ்தாரா விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியாவின் மிக முக்கியமான போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக விமான சேவை இருந்து வருகிறது. இதில் ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. இவற்றில் விஸ்தாரா நிறுவனமானது ஏர் இந்தியா உரிமையாளரான டாடாவின் குழுமமும் சிங்கப்பூர் ஏர்லைன்சும் கூட்டாக இணைந்து உருவாக்கப்பட்டது. 






இதனிடையே ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான சம்பள அமைப்பைக் கொண்டிருக்கும் என்ற அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாத நடுப்பகுதியில் வெளியானது. இதன்பின்னர்  விஸ்தாரா விமான சேவையில் பெரும் மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக விஸ்தாராவில் சராசரியாக 10 முதல் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.






விமானிகள் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி கடைசி நேரத்தில் விடுமுறை எடுப்பதால் விமானங்களை உரிய நேரத்தில் இயக்க சிக்கல் ஏற்படுவதாக விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இருந்து விஸ்தாராவின் 10 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியாளர்கள் பற்றாக்குறையால் சிக்கித் தவித்து விஸ்தாரா நிறுவனத்தில் ஊதிய பிரச்சினைக்காகவே விமானிகள் இத்தகைய முடிவுகளை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில் விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளால் பயணிகள் சமூக வலைத்தளத்தில் அந்நிறுவனத்தை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு விஸ்தாரா நிறுவனமும் உடனுக்குடன் பதிலளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Priyanka Deshpande: “நிறைய குழந்தை பெத்துக்க ஆசை: கணவரால் சந்தோஷமே இல்ல” - விஜய் டிவி பிரியங்கா வேதனை!