விருதுநகர் மாவட்டம் வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் (புத்தாக்க) தொழில் துவங்குவதற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
ஸ்டார்ட் அப்கள்
வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில் ஸ்டார்ட் அப் தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்டார்ட் அப்கள் விரைவாக வளரும் திறனை கொண்டிருப்பதால் ஒரு பெரிய அளவிலான சந்தையை அடைய முடியும். மேலும் புதிய வணிகம் என்பதால் அவற்றின் எதிர்கால சந்தை தேவையும் நிச்சயமற்றதாக இருக்கும். எனவே இத்தொழிலுக்கு அரசு மானியம் அளித்து ஸ்டார்ட் அப்கள் தொடங்க வழிவகுக்கிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் நிறுவனம் அல்லது ஸ்டார்ட் அப் இந்தியாவின் கீழ் பதிவு செய்திருத்தல் அவசியம். இந்நிறுவனம் கம்பெனி சட்டம் 2013-ன் கீழ் தனியார் நிறுவனமாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனமாகவோ பதிவு செய்யப்பட வேண்டும்.
மானியம் எப்படி?
கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக லாபம் 5 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் நிறுவனம் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பிரிந்த கிளை நிறுவனமாகவோ அல்லது மறு சீரமைக்கப்பட்டதாகவோ அல்லது மற்றொரு நிறுவனத்தின் கிளை கூட்டு நிறுவனமாகவோ இருக்கக்கூடாது. புத்தாக்க நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு அல்லது சமூகத்தின் மீது நேர்மறை தாக்கத்தை கொண்டிருத்தல் வேண்டும். புத்தாக்க நிறுவனம் அரசிடமிருந்தோ அல்லது அரசு சார் பிற நிறுவனங்களிடமிருந்தோ எந்த கடனும் வைத்திருத்தல் கூடாது. மேலும் விண்ணப்பதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனமாக இருத்தல் வேண்டும். பயிர், கால்நடை மற்றும் மீன்வளம் போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். மொத்த நிதியில் 5 சதவீத நிதியுதவி முதல் நிலையில் உள்ள சிறிய அளவிலான மாதிரி தயாரிக்கும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகபட்ச மானியம் ரூ.1 லட்சம் ஆகும். புதுமை தொழில் தொடங்குவது இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக துவங்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ஒரு அலகிற்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே துவங்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் சந்தையை விரிவுபடுத்த ஒரு அலகிற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பித்தினை www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். மதிப்பீட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். இதில் தகுதியற்றதாக கண்டறியப்பட்ட நிறுவனங்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு சரியான பதில் கிடைக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் மறுபரிசீலனை செய்யப்படும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள வேளாண் வணிக துணை இயக்குநர், வேளாண் வணிகம், 105 மதுரை சாலை, ஒழுங்குமுறை சந்தைக் குழு வளாகம், விருதுநகர் 626001 அவர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.