மத்திய அரசு பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக அறிவித்தார்.


2வது நாளாக சரிந்த தங்கம்:


குறிப்பாக, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைப்பதாக அறிவிப்பில் வெளியானது. இதையடுத்து, நேற்றே தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 100 வரை குறைந்தது. இந்த நிலையில், பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 480 குறைந்துள்ளது.


சென்னையில் கிராம் தங்கம் ரூபாய் 6 ஆயிரத்து 490 ஆக உள்ளது. சரவன் தங்கம் ரூபாய் 51 ஆயிரத்து 920க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி கிராமிற்கு ரூபாய் 92க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 92 ஆயிரத்திற்கு விற்பனையாகி வருகிறது.


இறக்குமதி வரி குறைப்பு:


பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஆடம்பர மற்றும் ஆபரணப் பொருளாக தங்கம் இருந்தாலும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் நகையாக மட்டுமின்றி சேமிப்பாகவும் உள்ளது. இந்த நிலையில், சமீபகாலமாக தங்கத்தின் விலையானது விண்ணை முட்டும் அளவுக்கு ஏறிக் கொண்டே சென்று வருகிறது.


இதனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்கம் விலையை குறைக்க ஏதேனும் அறிவிப்பு வருமா? என்று மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் மத்திய அரசு குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. தங்கம் மட்டுமின்றி வெள்ளி மீதான இறக்குமதி வரியும் 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி 6.4 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, நாடு முழுவதும் தங்கத்தின் விலை நேற்று முதல் குறைந்தது. இறக்குமதி வரி 6 சதவீதம் குறைத்தாலும் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 52 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. வரிகள் குறைத்தும் சாமானியன்களுக்கு எட்டாக்கனியாகவே தங்கம் இருந்து வருவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.