சமையல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முதன்மையானது டப்பர்வேர் நிறுவனம், காற்றுபுகாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என இவர்களது உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிறுவனம் 1946ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.



திவால் ஆகிறது டப்பர்வேர் நிறுவனம்:


75 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கி வந்த இந்த நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு முதல் நிதி நெருக்கடிக்கு ஆளானது. கடன் மிகப்பெரிய அளவில் டப்பர்வேர் நிறுவனத்தை ஆட்கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது, 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதல் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சொத்து உள்ள இந்த டப்பர்வேர் நிறுவனத்திற்கு 1 பில்லியன் முதல் 10 பில்லியன் வரை கடன் இருப்பதாக அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது.






இதனால், இந்த வாரம் இந்த நிறுவனம் திவால் அறிவிப்பை வெளியிட உள்ளது. இதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணியில் டப்பர்வேர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. டப்பர்வேர் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பங்குச்சந்தையில் தாக்கம்:


டப்பர்வேர் நிறுவனத்தின் கடனை அடைப்பதற்காக முதலீடுகள் செய்ய பல கடன் முதலீட்டு நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், டப்பர்வேர் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களின் தேவைகள் குறைந்துள்ளதால், உற்பத்தியை தொடர முடியாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. டப்பர்வேர் நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடி ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய உள்ளது.


உலகின் மிகப்பெரிய நிறுவனமான டப்பர்வேர் நிறுவனம் திவால் ஆக உள்ளது வர்த்தக உலகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்க பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் டப்பர்வேர் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகளவில் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.