தொழில்துறையை பொறுத்தமட்டில் இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து வகையான துறை சார்ந்த தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளது.
ஏற்றுமதி:
இந்தியாவிலே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் 31 ஆயிரத்து 517 தொழிற்சாலைகள் உள்ளது. மோட்டார் வாகனம், ரெடிமேட் ஆடைகள், ஜவுளி பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு என ஒவ்வொரு வகை தயாரிப்பிலும் ஒவ்வொரு மாவட்டங்கள் முன்னணியில் உள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறந்த மாவட்டமாக காஞ்சிபுரம் திகழ்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் கடந்தாண்டு இந்த காலகட்டத்தில் ரூபாய் 1 லட்சத்து 90 ஆயிரத்து 628 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்றுமதியில் டாப் 10 மாவட்டங்கள்:
1. காஞ்சிபுரம் - ரூ. 1.90 லட்சம் கோடி
2. சென்னை - ரூ. 59 ஆயிரத்து 323 கோடி
3. திருப்பூர் - ரூ.35 ஆயிரத்து 019 கோடி
4. கோவை - ரூ.27 ஆயிரத்து 421 கோடி
5. கிருஷ்ணகிரி - ரூ.26 ஆயிரத்து 077 கோடி
6. திருவள்ளூர் - ரூ. 25 ஆயிரத்து 850 கோடி
7. வேலூர் - ரூ.8 ஆயிரத்து 039 கோடி
8. கரூர் - ரூ.6 ஆயிரத்து 247 கோடி
9. தூத்துக்குடி - ரூ.6 ஆயிரத்து 056 கோடி
10. ஈரோடு - ரூ.5 ஆயிரத்து 711 கோடி
மேலே கூறிய 10 மாவட்டங்கள்தான் தமிழ்நாட்டின் ஏற்றுமதியில் கடந்தாண்டு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்:
சென்னையின் புறநகர் பெரும்பாலும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழே வரும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்களும், அதன் உதிரிபாக நிறுவனங்களும் அதிகளவு உள்ளது. இதனால், உள்நாடு, வெளிநாடு ஏற்றுமதியில் காஞ்சிபுரம் கொடிகட்டிப் பறக்கிறது.
பின்னலாடை, ஆயத்த ஆடை தயாரிப்பில் முன்னணி மாவட்டமாக திகழும் திருப்பூரில் 35 ஆயிரத்து 019 கோடி ரூபாய் ஏற்றுமதி நடந்துள்ளது. ட்ரம்ப் கொண்டு வந்த வரி விதிப்பால் அங்கு ஆண்டின் பிற்பாதியில் ஏற்றுமதியில் தொய்வுகள் ஏற்பட்டது.
பரிதாப நிலையில் தென்மாவட்டங்கள்:
தென்மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் தொழில்துறையில் முதல் 10 இடங்களில் தூத்துக்குடி மட்டுமே உள்ளது. துறைமுகத்தை கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை ரூபாய் 6 ஆயிரத்து 056 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் வேறு எந்த மாவட்டமும் ஏற்றுமதியில் டாப் 10 இடங்களில் இடம்பிடிக்காதது தென்மாவட்டத்தில் தொழிற்துறை மேலும் வளர வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
இந்த தரவுகள் மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் இடம்பிடித்துள்ளது. வட மாவட்டங்களிலும், எல்லையோர மாவட்டங்களிலும் ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால் அங்கு ஏற்றுமதி வர்த்தகம் அதிகளவில் நடந்து வருகிறது.
மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது தென்மாவட்டங்களில் பெரும்பாலும் விவசாய பணிகளே இருப்பதும் இந்த தொழிற்துறையில் டாப் 10 இடங்களுக்குள் தூத்துக்குடி தவிர மற்ற மாவட்டங்கள் இடம்பெற முடியாததற்கு ஒரு காரணம்.