வினய் காமத் எழுதிய டைட்டன் புத்தகம் (TITAN: Inside India’s Most Successful Consumer Brand) நீண்ட நாட்களாக பிரிக்கப்படாமலே இருந்தது. இன்று எடுத்து படிக்கத் தொடங்கலாம் என நினைத்த போது டைட்டன் தொடர்பான வேறு ஒரு ஆராய்ச்சி கட்டுரை நினைவுக்கு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜான்ஸன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் சென்றிருந்தேன். அந்த கல்லூரியின் நிர்வாக பேராசிரியர், டைட்டன் நிறுவனத்தின் ஜூப் (zoop) எப்படி உருவானது என என்னும் ஆராய்ச்சி கட்டுரையை எழுதியதை படிக்க நேர்ந்தது. ஒரு தொழில் தொடங்குவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் எப்படி தொடங்க வேண்டும் டைட்டன் என்ன செய்தது என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்தது. அந்த ஆராய்ச்சி கட்டுரையின் சுருக்கமான வடிவம் இதோ!


டைட்டன் நிறுவனத்தில் பல பிரிவுகளுக்கு பல வகையான வாட்ச்கள் உள்ளன. ஆண்கள், பெண்கள், குறைந்த விலை, அதிக விலை, மிக  அதிக விலை வாட்சுகள் என பல உள்ளன. ஆனால் குழந்தைகளுக்கான வாட்சுகள் மட்டும் இல்லை.




பெரியவர்களுக்கான வாட்சுகளில் பிராண்ட்களுக்கான முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் குழந்தைகளுக்கான வாட்ச்களில் சிறு சிறு அன்ஆர்கனைஸ்ட் நிறுவனங்கள் பல்கி பெருகி இருக்கின்றன. தவிர குழந்தைகளுக்கான வாட்ச்ட்கள் என்பதால் பெற்றோர்களும் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 40 ரூபாய்க்கு கூட வாட்ச் கிடைக்கும் போது ஏன் பிராண்டட் வாட்சுகளை வாங்க வேண்டும். அதனால் குழந்தைகளுக்கான வாட்ச் பிரிவில் பிராண்டட் நிறுவனங்களால் நுழையமுடியவில்லை.


முதல் முயற்சி தோல்வி:


குழந்தைகளுக்கான சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்த டைட்டன் 1998-ம் ஆண்டு `டேஷ்’ (Dash) என்னும் பெயரில் குழந்தைகள் பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ரூ.250 முதல் ரூ.395 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போதைய சூழலுடன் ஒப்பிட்டால் இந்த விலை குறைவு என்ன தோன்றும். ஆனால் 2000-ம் ஆண்டுக்கு முன்பாக இந்த விலை என்பது நடுத்தர மக்களுக்கு கொஞ்சம் அதிகமான தொகைதான். அந்த சமயத்தில் 10 கிராம் தங்கமே சுமார் 4,000 ரூபாய் என்னும் அளவுக்குதான் விற்பனையானது.




மக்களுக்கு விலை அதிகம் என்றாலும் டைட்டன் நிறுவனத்தை பொறுத்தவரை இது மிகவும் குறைந்த தொகைதான். இந்த தொகைக்கு கொடுக்க வேண்டும் என்பதால் இதற்கு ஏற்ப மூலப்பொருட்களை வாங்குவது பெரும் சவாலாக இருந்தது.  மேலும் டிசைன், குழந்தைகளின் கடினமான கையாளுவதால் வாட்ச் உடைதல் போன்றவை அதிகம் இருந்தது. அதனால் இந்த பிராண்ட் தோல்வியில் முடிவடைந்து. தவிர இதனை Ahead of time product என்று கூட சொல்லலாம். 1991-ம் ஆண்டு பிறகுதான் நடுத்தர மக்களின் எண்ணிக்கை உயர தொடங்கியது. அதனால் மக்களின் மனநிலை மாறுவதற்கு முன்பே டேஷ் வெளியாகிவிட்டது. அதனால் டேஷ் தோல்வியடைந்துவிட்டது. 2003-ம் ஆண்டு இந்த பிராண்ட் மூடுவிழா கண்டது.


மறு முயற்சி


அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பெரிய வளர்ச்சி நடக்கிறது. இந்த மாற்றம் கண்கூடாக தெரிகிறது. 2000-ம் ஆண்டை விட 2010-ம் ஆண்டில் தனிநபர் வருமானம் ஐந்து மடங்கு அளவுக்கு உயரந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளுக்கு ஏற்றம் இருக்கும் என கணிக்கப்பட்டது. இதைவிட முக்கியம் குடும்பங்களில் உபரி வருமானம் கூடத்தொடங்கியது. இது வாட்ச்க்கு மட்டுமல்லமல் பல பொருட்களுக்கும் பொற்காலமாக இருந்தது. அதனால் ஜூப் என்னும் பெயரில் 2010-ம் ஆண்டு குழந்தைகளுக்கான வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது.




ஆனால் இதற்கு ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை டைட்டன் உணர்ந்துவிட்டது. 2009-ம் ஆண்டு இந்தியாவில் 36 கோடி குழந்தைகள் (0 வயது முதல் 14 வயது) இருந்தனர். சர்வதேச அளவில் அதிக குழந்தைகள் இருக்கும் நாடாக இந்தியா இருந்தது. அதைவிட குழந்தைகளாக இருக்கும்போதே டைட்டன் பிராண்ட் பெயரை பதிய வைத்துவிட்டால் வளர்ந்த பிறகு அவர்களை ஈர்ப்பதற்கு  டைட்டனில் பல பிராண்ட்கள் இருப்பதை உணர்ந்தது நிறுவனம். சொனாட்டா, ராகா, பாஸ்ட்ராக், எட்ஜ் உள்ளிட்ட பல பிராண்ட்கள் இருக்கின்றன.


கள நிலவரம்:


பொருளாதார சூழல் சரியாக இருந்தாலும் சரியான மார்க்கெட் ரிசர்ச் செய்த பிறகே இந்த புராடக்ட் அறிமுகம் செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் செல்போன் வரத்தொடங்கிவிட்டது. அடுத்த சில ஆண்டுகளிலே ஸ்மார்ட்போன் வந்தது. அதனால் வாட்ச் கட்டும் பழக்கம் குறைந்தது போல ஒரு தோற்றம் இருந்தது. ஆனால் வாட்ச் என்பது நேரம் பார்ப்பதற்கு மட்டுமல்லாமம்ல் அது ஒரு லைப் ஸ்டைல் புராடக்டாகவும் இருந்தது. அதனால் பெரிய பாதிப்பு இருக்காது என ஆய்வில் தெரியவந்தது. தவிர பள்ளிகளில் செல்போனுக்கு தடை இருந்தது. ஆனால் வாட்ச்களுக்கு தடை இல்லை, தவிர நேர மேலாண்மைக்கு வாட்ச் பயன்படும் என்பதால் வாட்ச் அனுமதிக்கப்பட்டது. இந்த காரணங்களால் வாட்சு விற்பனையில் பெரிய தாக்கம் இருக்காது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


தவிர பள்ளிகளும் நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குழந்தைகளுக்கான் வாட்ச் தேவை இருக்கும் என்பது உணரப்பட்டது.


இதனை தொடர்ந்து யாருக்கு என்பது தீர்மானிக்கப்பட்டது. மூன்று வயது முதல் 14 வயதுள்ளவர்கள் குழந்தைகள் என்று சொன்னாலும் 5 வயது முதல் 12 வயதுடையவர்கள்தான் சந்தை என்பதை டைட்டன் தீர்மானித்தது. மேலும் நேரம் பார்ப்பது மட்டுமே இலக்கு என்றாலும் குழந்தைகளுக்கு பிடித்தமானவையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல விதமான டிசைன்கள் வடிவமைக்கப்பட்டன. ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு என பிரத்யேகமான டிசைன் உருவாக்கப்பட்டது.




குழந்தைகள்  பிரிவில் வீடியோகேம்ஸ், பொம்மைகள், ஆடைகள் என குழந்தைகளுக்கான சந்தை பெரியது என்பதால் குழந்தைகளை கவரும் வகையில் டிசைன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான காலண்டர், ஸ்டாப் வாட்ச், அலாரம் என அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருந்தன. பெரியவர்களை போல குழந்தைகள் வாட்சுகளை கவனமாக கையாளுவார்கள் என சொல்ல முடியாது. அதனால் டிசைனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உறுதித்தன்மைக்கும் கொடுக்கப்பட்டது.


பெயர் விஷயத்தில் அனைத்து பிராண்ட்களும் இதே அக்கறையை எடுத்துக்கொள்ளும். பிராண்டின் பெயருக்கு எந்த மொழியிலும் தவறான அர்த்தம் இருக்ககூடாது. தவறான உச்சரிப்பு கூடாது, எளிதாக இருக்க வேண்டும் என பல பெயர்களை பட்டியலிட்டு இறுதியில் ஜூப் என்னும் பெயரை டைட்டன் வைத்தது. விலையை எடுத்துக்கொண்டால் பெற்றோர் வாங்கிக்கொடுக்க முடிகிற விலையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் பெரும்பாலான வாட்சுகள் அன்பளிப்புகளாக வாங்கப்படுகின்றன. அதனால் குறைந்த விலை பொருளாகவும் இருக்க கூடாது என முடிவெடுத்து ரூ.350 முதல் ரூ.900 வரையில் (2010-ம் ஆண்டில்) நிர்ணயம் செய்யப்பட்டது.  இப்போதும் பெரும்பாலான வாட்ச்கள் ரூ.1000க்கு கீழேதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு பொருளை அறிமுகம் செய்வதற்கு முன்பு செய்யவேண்டிய பல விஷயங்களை ஜூப் நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. தற்போது டைட்டன் நிறுவனத்தின் முக்கிய அங்கமாக ஜூப் திகழ்கிறது. நீங்கள் சிறு வயதாக இருந்த போது சவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டியது நினைவுக்கு வந்தததா? எனக்கு வந்தது!


டைட்டன் புத்தகத்தை படித்தபிறகு அதிலிருக்கும் சுவாரஸ்யங்களை பிறகு பார்ப்போம்.