Elon Musk: அண்மையில் இந்தியா வரவிருந்த எலான் மஸ்க்கின் திட்டம், கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லாவின் இந்திய முதலீடு நிறுத்தம்:
டெஸ்லா நிறுவனம் தனது முதலீட்டு திட்டங்களை இந்தியாவில் நிறுத்தி வைத்துள்ளது. அதோடு இந்திய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளையும் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியா வரவிருந்த திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அந்நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் தொடர்பான திட்டங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
காரணம் என்ன?
இதுதொடர்பாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மஸ்க் தனது பயணத்தை தாமதப்படுத்தியதிலிருந்து டெஸ்லா நிறுவனம் சார்பில் யாரும் இந்திய அதிகாரிகளை அணுகவில்லை. டெஸ்லாவில் தற்போது நிலவும் மூலதனச் சிக்கல்கள் காரணமாக, இந்தியாவில் புதிய முதலீடுகளை விரைவில் திட்டமிடவில்லை என்று அந்த அறிக்கை மேற்கோள் காட்டுகிறது.
டெஸ்லா நிறுவனம் அதன் உலகளாவிய டெலிவரிகளில் இரண்டாவது காலாண்டாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சீனாவிலும் உள்நாட்டு நிறுவனங்களால் அதிக போட்டியை எதிர்கொள்கிறது. சமீபத்தில், மஸ்க் குறிப்பிடத்தக்க ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் அறிவித்தார். சில ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு டெஸ்லா அறிமுகப்படுத்திய புதிய மாடலான சைபர்ட்ரக், விண்ட்ஷீல்ட் வைப்பர்களில் உள்ள சிக்கல்கள் காரணமாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கூடுதலாக, மெக்சிகோவில் ஒரு புதிய ஆலையின் கட்டுமானம் தாமதமாகியுள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், டெஸ்லாவின் இந்திய முதலீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் டெஸ்லா கார்களின் நேரடி விற்பனை என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்தியாவிற்கான திட்டம் என்ன?
எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்பினார். ஆனால் அவசர பணிகளால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. கணிசமான உள்ளூர் முதலீடு மற்றும் உற்பத்திக்கு உறுதியளிக்கும் வெளிநாட்டு கார் உற்பத்தியாளர்களுக்கான EV களின் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா குறைத்த நிலையில், அவரது பயணம் திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில் முதலீட்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு இருந்தபோதிலும், டெஸ்லா மீண்டும் ஈடுபட முடிவு செய்தால் புதிய இறக்குமதி வரிக் கொள்கையின் கீழ் வரவேற்கப்படும் என்று இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், EV உற்பத்தியை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் போன்ற உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்களின் மீது அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் மின்சார வாகன சந்தை இன்னும் வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்த விற்பனையில் பேட்டரி மூலம் இயங்கும் கார்கள் 1.3 சதவீதம் மட்டுமே. அதிக முன் செலவுகள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவை சாத்தியமான வாங்குபவர்களுக்கு பெரும் தடைகளாக உள்ளன.