டாடா மோட்டார்ஸ் என்றவுடன் நமக்கெல்லாம் டாடா நானோவின் தோல்விதான் உடனடியாக நினைவுக்கு வரும். நானோவுக்கு வழங்கப்பட்ட அதிக முக்கியத்துவம், விளம்பரம் காரணமாக எழுந்த அதீத எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாதது எனப் பல காரணங்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காமல், புதிய சந்தைப்பிரிவை உருவாக்கி அதில் பிரமாண்ட வெற்றியை அடைந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். தமிழகத்தில் `குட்டி யானை’ என்று அழைக்கப்படும் Tata Ace எப்படி வெற்றி அடைந்தது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
தங்க நாற்கர சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட சமயத்தில், சந்தையில் இருவிதமான தேவைகள் உருவானது. அதிக எடையை தாங்ககூடிய பெரிய லாரிகள். கிராமப்பகுதிகளுக்குச் செல்வதற்கு தேவையான சிறிய டிரக்குகள் என இரு வேறுவிதமான தேவைகள் உருவாயின. அந்த சமயத்தில் லாரி பிரிவில் ‘டாடா 407’தான் சிறிய வண்டி. அதைவிடச் சிறியது என்றால், என்றால் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே இருந்தன.
அதனால் நான்கு சக்கரத்தில் சிறிய வாகனத்தை உருவாக்க வேண்டும் என்னும் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் முன்னெடுத்தது. இதற்காக கிரிஷ் வாஹ் (அப்போது 29 வயது பொறியாளர்) தலைமையில் இந்தியா முழுவதும் பூனே, கோவை உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களில் ஆய்வு மேற்கொண்டது டாடா மோட்டார்ஸ்.
மூன்று சக்கர வாகனத்தின் பிரச்னை?
பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் பியாஜியோ ஆகிய நிறுவனங்கள் மூன்று சக்கர பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த வாகனங்கள் எளிதில் கவிழக்கூடியவை. அதிக பாரம் ஏற்ற முடியாது. தவிர, அதிக தூரம் செல்ல முடியாது. இந்த வாகனங்களில் அதிக அதிர்வு இருக்கும் காரணத்தால் முதுகு வலி பிரச்னை ஏற்படுவதாக பல ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தனர்.
கோவையில் உள்ள ஒரு ஓட்டுநருடன் கிரிஷ் வாக் ஒரு நாள் முழுக்க செலவிட்டார். அப்போது வழக்கமான காரணங்களை கூறிய அந்த ஓட்டுநர் இறுதியாக மூன்று சக்கர வாகனத்தைவிட நான்கு சக்கர வாகனமாக இருந்தால் திருமணம் விரைவாக நடக்கும் என கூறியிருக்கிறார்.
நான்கு சக்கர சிறிய வாகனம் என்பது சந்தையின் தேவை சார்ந்து மட்டுமல்லாமல் சமூக காரணங்களையும் உள்ளடக்கியது என கிரிஷ் வாஹ் முடிவெடுக்க, அந்தக் காரணம் போதுமானதாக இருந்தது.
இந்த சமயத்தில் இந்தியா முழுவதும் உள்ள 4000-க்கும் மேற்பட்ட மூன்று சக்கர வாகன உரிமையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அனைவரும் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்லவே விரும்புகிறார்கள். தவிர டாடா 407 போன்ற நான்கு சக்கர வாகனத்தை வைத்திருந்தவர்கள் கூட, மூன்று சக்கர வாகனத்தின் விலையில் நான்கு சக்கர வாகனம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்தனர். ஆனால் அப்படி ஒரு வாகனம் அதுவரை சந்தைக்கு வரவேயில்லை. மூன்று சக்கர வாகனத்தை வாங்குவது சமூகம் சார்ந்த பிரச்னையாகவும் இருக்கிறது என்பதை கண்டறிகிறார்கள்.
ஆய்வு முடிவுகள் ரத்தன் டாடாவிடம் கொண்டு செல்லப்பட்டன. டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகனங்கள் பிரிவில் மந்த நிலையில் நிலவியதால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் நஷ்டம் இருந்தது. (1998-99 ஆண்டுகளில்) இருந்தாலும் புதிய பிரிவை உருவாக்குவதன் மூலம் பெரிய வாய்ப்புகளை பெற முடியும் என நம்புவதால் ரத்தன் டாடா அனுமதி வழங்கினார்.
2001-ஆம் ஆண்டு திட்டத்துக்கு அனுமதி கிடைக்கிறது. 2005-ஆம் ஆண்டு டாடா ஏஸ் அறிமுகம் செய்யப்படுகிறது.
வழக்கமாக சர்வதேச அளவில் ஒரு புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்றால் 50 கோடி டாலர்கள் வரை திட்டத்தின் மதிப்பு இருக்கும். ஆனால் இந்த புதிய திட்டத்துக்கு 5 கோடி டாலர்கள் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் மூன்று சக்கர வாகனத்தின் விலை ரூ.2 லட்சம் என இருந்து. இதே விலைக்கு அறிமுகம் செய்ய டாடா குழுமம் திட்டமிட்டது. ஆனால் 2005-ஆம் ஆண்டு வெளியிடும்போது ரூ.2.25 லட்சமாக விலை இருந்தது. ஒரு நாளைக்கு 500 கிலோமீட்டர் வரை தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு இருந்தது. (மூன்று சக்கர வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி இல்லை)
இந்த வாகனம் அறிமுகம் ஆன சில மாதங்களிலே பெரிய வெற்றி அடையப்போகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. முதல் ஆண்டில் தினமும் சராசரியாக 100 வாகனங்கள் விற்பனையாயின. இரண்டாம் ஆண்டில் (2007) ஒரு லட்சமாக இந்த எண்ணிக்கை உயர்ந்தது. இதனை தொடர்ந்து Tata Ace பிரிவில் பல வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2012-ஆம் ஆண்டின்போது 10 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. 2017-ஆம் ஆண்டு இறுதியில் 20 லட்சம் வாகனங்கள் இந்த பிரிவில் விற்பனையாகி இருந்தன. மூன்று நிமிடங்களுக்கு ஒரு வாகனம் விற்பனையானது. தற்போது நான்கு சக்கர சிறிய வர்த்தக வாகனங்கள் பிரிவில் பெரும்பான்மையான சந்தையை வைத்திருக்கிறது Tata Ace.
சிறு நகரங்களில் பல தொழில்முனைவோர்களை உருவாக்கியதில் டாடா ஏஸ் வாகனத்தின் பங்கு மகத்தானது. தொழிலில் புதிய Segment-யை கண்டுபிடித்து விரிவுபடுத்துவது என்பது மிக சவாலான ஒன்று. அதில் சாதித்துக் காட்டியது டாடா. டாடா ஏஸில் கிடைத்த பிரமாண்ட வெற்றி நானோ விஷயத்தில் டாடாவின் கண்ணை மறைத்திருக்கலாம்.