வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை ஷாக் கொடுத்துள்ளது.உள்நாட்டுப் பங்குகள் பலவீனமான நிலையிலேயே பங்குச்சந்தை இன்று திறக்கப்பட்டது. கடந்த வாரம் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்புகளை விட குறைந்ததால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்துள்ளனர். இவை இரண்டுமே பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், எம் &எம், பவர் கிரிட் கார்ப், மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் லாபத்திலும், மறுபுறத்தில் இன்ஃபோசிஸ் , டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி , டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் அதிக நஷ்டத்திலும் உள்ளன.


சென்செக்ஸ் வீழ்ச்சியில் இரண்டு பங்குகளும் மட்டும் 500 புள்ளிகளுக்கு மேல் பங்களித்துள்ளன. அதேபோல் நிஃப்டி 50 வெயிட்டேஜில் கிட்டத்தட்ட 18 சதவீதத்தை இரண்டு பங்குகளும் பெற்றுள்ளன. கோவிட் தடைகளால் பாதிக்கப்பட்ட சீன ஜிடிபி வளர்ச்சி எண்கள் மார்ச் காலாண்டில் 4.8 சதவீதமாக வந்த பிறகு ஆசிய சந்தைகளும் பலவீனமாக இருந்தன. இந்நிலையில் தற்போதும் சீனா மீண்டும் கொரோனா சிக்கலில் சிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவின் பொருளாதார மையமான ஷாங்காயில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து அந்த பாதிப்பு உலக சந்தையில் எதிரொலிக்கின்றன. 




பிற்பகல் 12.58 மணியை பொறுத்தவரை, பிஎஸ்இ சென்செக்ஸ் 1465 புள்ளிகள் அல்லது 2.51 சதவீதம் குறைந்து 56,873.72 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. நிஃப்டி 50 389 புள்ளிகள் அல்லது 2.23 சதவீதம் குறைந்து 17,086 இல் வர்த்தகம் செய்யப்பட்டது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1% வரை சரிந்து சிறப்பாக செயல்பட்டன. ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தெரிவித்துள்ள கொடாக் மஹேந்திரா லைஃப் இன்சூரன்ஸின் ஹேமன்ந்த், ''உலகளவில் பணவீக்கத்தை நிர்வகிப்பது என்பது வளர்ச்சியை விட முக்கியமானது. ஏனெனில் அதிக பொருட்களின் விலைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் விவசாயப் பொருட்களின் விலை உயர்வு என்பது, பொதுமக்களின் வாழ்க்கைச் செலவை பல மடங்கு உயர்த்திவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.