இந்திய அரசு, ரிசர்வ் வங்கி மூலம் ஒவ்வொரு ஆண்டும் SGB எனப்படும் தங்க பத்திரங்கள் வெளியிடுகிறது. 


ஜுன் 20 முதல் 24 வரை வாங்கலாம்


அந்த வகையில் இந்த 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான சவரன் கோல்டு பாண்டுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டின் முதல் தவணையாக வெளியிடப்படும் இந்த பாண்டுகளை ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் முதலீட்டாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். 




இதற்கான விலை கிராமுக்கு ரூ.5,091 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் வாங்குபவர்களுக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


யார் யார் வாங்கலாம்?


தங்க பத்திரம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழங்கும் அரசுப் பத்திரமாகும். இவற்றை டிமேட் வடிவமாகவும் மாற்றலாம்.


சவரன் தங்க பத்திரம் வாங்க விரும்பும் முதலீட்டாளர்கள் இந்தியக் குடியுரிமை பெற்ற நபர்கள், HUFகள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற வகையின் கீழ் வர வேண்டும்.


இந்தப் பத்திரங்கள் பொதுவாக ஆண்டுக்கு 2.50 விழுக்காடு என்ற நிலையான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. வருமான வரி பிடித்தம் போக இந்த வட்டிப் பணம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளர்களின் கணக்குகளை வந்தடையும்.


24 காரட் தூய்மையான தங்கம்




தங்க பத்திரங்களின் தரம் குறித்து என்றுமே கவலைப்படத் தேவையில்லை. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் (NSE) கூற்றுப்படி, இந்த தங்கப் பத்திரங்களின் விலையானது, இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) வெளியிடும் 24 காரட் தூய்மையான தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.


முதிர்வுக் காலம்


இந்த தங்கப் பத்திரங்களின் முதிர்வுக் காலம் எட்டு ஆண்டுகள். எனினும் எட்டு ஆண்டு காலத்துக்கு முன் நீங்கள் பத்திரங்களை திரும்பப் பெற விரும்பினால் அதற்கு குறிப்பிட்ட வரித்தொகை செலுத்த வேண்டும். 8 ஆண்டுகள் முதிர்வுக்குப் பிறகு பத்திரங்களைப் பெற்றால் அவற்றுக்கு வரி இல்லை.


தவிர, 5 ஆண்டுகள் கழித்து முதலீட்டுப் பணத்தை திரும்பப் பெற விரும்புபவர்களுக்கு நீண்ட கால மூலதன ஆதாயம் (Long term Capital Gain) ஆகக் கருதி வரி விதிக்கப்படும்.


நேரில் வாங்கும் இடங்கள்


ஆன்லைன் தவிர, வங்கிக் கிளைகள், தபால் நிலையங்கள், பங்குச் சந்தைகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆல் இந்தியா (SHCIL) ஆகிய இடங்களில் நேரடியாக சென்றும் முதலீடு செய்யலாம். இந்த இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் பெற்று அங்கேயே முதலீடு செய்யலாம் அல்லது ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் படிவங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு பான் கார்டு அவசியம்.


தங்க பத்திரம் வாங்குவதன் நன்மைகள்




பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பணவீக்கம் அதிகரிப்பு, பங்குச் சந்தையில் சரிவு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது வருங்காலத்தில் பயனளிக்கும்.


ஆபரணத் தங்கத்தை வாங்க விரும்பாதவர்களுக்கான சிறந்த முதலீட்டு வாய்ப்பாக இந்தப் பத்திரங்கள் கருதப்படுகின்றன. மேலும் செய்கூலி, சேதார செலவுகள் இன்றியும்,- பாதுகாப்பதற்கு எளிதாகவும் இருக்கும் இந்த பாண்டுகள் சிறந்த முதலீட்டு வாய்ப்பாகக் கருதப்படுகின்றன.


இந்த இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் சவரன் 55 ஆயிரம் வரை உயரலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது நன்மை பயக்கும்.