இந்த ஆண்டின் முதல் வர்த்தக தினமான ( இன்று ) திங்கட்கிழமை முடிவில், இந்திய பங்குச் சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்தது. இந்நிலையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 123.53  புள்ளிகள் உயர்ந்து 60,964.27 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 92.15 புள்ளிகள் உயர்ந்து 18,197.45 புள்ளிகளாக உள்ளது.






லாபம் - நஷ்டம்:


அப்போலோ மருத்துவமனை, ஆசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், பிரிட்டானியா, சிப்லா, கோல் இந்தியா, கோடாக் மகேந்திரா, நெஸ்ட்லே,  டெக் மகேந்திரா, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் சென்றன.


டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ரிலையன்ஸ், மாருதி சுசுகி, இண்டஸ் இண்ட் வங்கி, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் காணப்பட்டன. 


பங்கு சந்தையில் தாக்கம்:


இந்திய பங்குச் சந்தை 2023 ஆம் ஆண்டின் முதல் அமர்வானது நேர்மறையான முடிவில் அமைந்தது. இந்தியாவின் உற்பத்தியானது 2022 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் இருந்த அளவை விட டிசம்பர் மாதத்தில் உயர்ந்தது.


மேலும், சீனா தங்கள் உள்நாட்டு தேவையை ஆதரிக்க ஏற்றுமதி வரிகளை உயர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழ்நிலை, இந்திய பங்கு சந்தை ஏற்றத்துக்கு வழி வகுத்தது.


உலக பொருளாதார மந்த நிலை, கொரோனா அதிகரிப்பு, கச்சா எண்ணெய் ஆகியவற்றின் தாக்கங்கள் பங்கு சந்தையில் ஏற்றத்தையும் இறக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.


இந்நிலையில் வருடத்தின் முதல் நாளே, இந்திய பங்கு சந்தை ஏற்றத்தில் முடிவடைந்தது, முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ரூபாயின் மதிப்பு:






இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 14 காசுகள் குறைந்து 82.75 ரூபாயாக உள்ளது.