நேற்று ரஷ்யாவின் தாக்குதலால் கடும் சரிவைக்கண்ட இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்று காலை முதல் மீளத் துவங்கியுள்ளது. ரஷ்யா உக்ரைனைத் தாக்கிய பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ரஷ்யாவிற்கு பொருளாதாரத் தடை விதித்து திருப்பித் தாக்கியதால், ஒரே இரவில் உயர்ந்ததை அடுத்து, தொடர்ந்து ஆசிய பங்குகள் மீண்டும் பழைய நிலையை அடைந்தன. காலை 9:21 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,135 புள்ளிகளாக, 2.08 சதவீதம் உயர்ந்து 55,665 ஆக இருந்தது; இந்திய பங்குச்சந்தையில் நிஃப்டி 325 புள்ளிகளாக 2 சதவீதம் உயர்ந்து 16,573 ஆக இருந்தது. நிஃப்டி நடுத்தர பங்குகள் 100 இன்டெக்ஸாக 3.45 சதவீதம் உயர்ந்து, ஸ்மால் கேப் பங்குகள் 4.61 சதவீதம் உயர்ந்ததால் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் லாபத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன.



பங்குச் சந்தை உலகத்திற்கே வியாழக்கிழமை கருப்பு தினமாக அமைந்தது. உக்ரைனில் ரஷியா ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. கடந்த 6 நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வியாழக்கிழமை மேலும் 2,702 புள்ளிகளை (4.72 சதவீதம்) இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணும் 815 புள்ளிகள் (4.78 சதவீதம்) சரிவடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.13.44 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.242.24 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முன்பேர வர்த்தகத்தில் பிப்ரவரி மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்கும் தினமாகவும் இருந்ததால், ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. உக்ரைன் மீது ரஷியா அதிகாரபூர்வமாக ராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது. உலக அளவில் அனைத்துச் சந்தைகளிலும் பங்குகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. ரஷிய பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.



ஆசியா, ஐரோப்பிய சந்தைகள் 4 சதவீதத்துக்கும் மேல் சரிவை எதிர்கொண்டன. அதன் தாக்கம், உள்நாட்டு சந்தையிலும் கடுமையாக எதிரொலித்தது. கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தையில், நேரம் செல்லச் செல்ல கொத்து, கொத்தாக பங்குகள் விற்பனை அதிகரித்தன. ஆனால் நேற்றிரவே அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது. "போரை தேர்ந்தெடுத்த ரஷ்யாவும், அந்நாட்டு அதிபர் புதினும் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. மேலும் அந்நாட்டு வங்கிகளான விடிபி., உள்ளிட்ட 4 வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷ்யாவின் சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்று ஜோ பைடன் அதிரடி முடிவு எடுத்ததால் உடனடியாக பங்குச்சந்தை நிலவரங்கள் உயரத்தொடங்கின. அதன்படி, இந்திய பங்குச்சந்தையும், ஆசிய மற்றும் உலக பங்குச்சந்தைகளும் உயர்த் தொடங்கி உள்ளன.