Disney+ Hotstar JIO: டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஒடிடி செயலியை அண்மையில், 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு முகேஷ் அம்பானி வாங்கியது குறிப்பிடத்தக்கது.


ஹாட் ஸ்டாரில் ஐக்கியமாகும் ஜியோ:


ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 ஆகியவற்றின் இணைப்பைத் தொடர்ந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை ஒரே ஸ்ட்ரீமிங் தளமாகத் தக்கவைத்துக் கொள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜியோசினிமா ஒடிடி செயலி ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஐக்கியமாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த நிறுவனத்திற்கான மைய ஸ்ட்ரீமிங் தளமாக நிலைநிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பணிகள் பூர்த்தி அடைந்த பிறகு, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியானது டிஸ்னி ஹாட்ஸ்டார் என்று ரீ-பிராண்ட் செய்யப்படும் என கூறப்படுகிறது.


இனி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மட்டுமே ஐபிஎல்


ஒடிடி வணிகத்திற்கான பல்வேறு உத்திகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஆராய்ந்தது. ஒரு கட்டத்தில், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை ஜியோசினிமாவில் ஒருங்கிணைக்க நினைத்தது. மேலும் இரண்டு தனித்தனி தளங்களை இயக்குவது பற்றி விவாதங்கள் நடந்தன. அதாவது ஒன்று விளையாட்டுக்காகவும் மற்றொன்று பொழுதுபோக்குக்காகவும் தொடரலாம் என யோசிக்கப்பட்டது. இருப்பினும், உயர்ந்த தொழில்நுட்ப உட்கட்டமைப்பு காரணமாக டிஸ்னி + ஹாட்ஸ்டாரை முன்னிலை படுத்த ரிலையன்ஸின் தலைமை விரும்புவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் ஜியோ சினிமா செயலியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அதில் பல தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதாக பயனாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் நடைபெறும் ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 ஆகியவற்றின் இணைப்ப்பால், இனி ஐபிஎல் தொடரானது ஹாட் ஸ்டார் செயலியிலேயே ஒளிபரப்பாக உள்ளது.


8.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம்:


வால்ட் டிஸ்னியின் ஸ்டார் இந்தியாவிற்குச் சொந்தமான ஸ்ட்ரீமிங் சேவையான Disney+ Hotstar, RIL-ன் கட்டுப்பாட்டில் உள்ள Viacom18க்கு சொந்தமான JioCinemaவின் 100 மில்லியன் பதிவிறக்கங்களுடன் ஒப்பிடும்போது, ​​Google Play Store இல் 500 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. பிப்ரவரியில், ஆர்ஐஎல் மற்றும் வால்ட் டிஸ்னி ஆகியவை ஸ்டார் மற்றும் வயாகாம்18ஐ இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. 100 சேனல்கள் மற்றும் இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்கள் ஒன்றிணையும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு $8.5 பில்லியன் ஆகும்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆண்டு அறிக்கையின்படி, ஜியோ சினிமாவின் சராசரி மாத பயனர்களின் எண்ணிக்கை 22.5 கோடி. டிஸ்னி ஹாட்ஸ்டார் சராசரியாக 33.3 கோடி மாத பயனர்களைக் கொண்டுள்ளது. முன்னதாக, Viacom 18 அதன் பிராண்டான Voot ஐ ஜியோ சினிமாவுடன் இணைத்தது. இது வூட், வூட் செலக்ட் மற்றும் வூட் கிட்ஸ் என மூன்று தளங்களைக் கொண்டிருந்தது.