ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, 6 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக குறைந்தது ரெப்போ வட்டி விகிதம். இதன் மூலம், தனி நபர் கடன், வீடு, வாகன கடன்களுக்காக வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
3-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி
நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு, குறுகிய கால கடன்களை வழங்கி வருகிறது மத்திய ரிசர்வ் வங்கி. அந்த கடன்களை வாங்கிய பிற வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன. அந்த வட்டி தான் ரெப்போ என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பொருளாதார சூழலுக்கு ஏற்க, அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைப்பது வழக்கமான ஒன்றுதான்.
இந்நிலையில், ஏற்கனவே 2 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 3-வது முறையாக 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 1 சதவீதம் குறைத்துள்ளது.
தற்போதைய வட்டி விகிதம் என்ன.?
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, ஏற்கனவே இருந்த 6 சதவீத ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.5 சதவீதமாக குறைந்துள்ளது.
ஏற்கனவே ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டபோது, 0.25 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டன. ஆனால், இந்த முறை 0.5 சதவீத வட்டி குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி விகித குறைப்பால் யாருக்கு பலன்.?
இந்த ரெப்போ வட்டி விகித குறைப்பால், வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டுக் கடன், வாகனக் கடன்கள் வாங்கியுள்ளோர் பலனடைவர். மேலும், புதிதாக கடன் வாங்குவோருக்கும் இது பலனளிக்கும் என கூறப்படுகிறது. இந்த வட்டி குறைப்பிற்கான அறிவிப்பை மற்ற வங்கிகள் விரைவில் வெளியிடும் என தெரிகிறது.