RBI Rules: வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவாவிட்டால் அவர்கள் மீது புகாரளித்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம்.


வங்கி ஊழியர்கள் அலட்சியமா?


பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது என பல்வேறு நிதிப்பணிகளுக்காக வங்கிக்குச் செல்கிறோம்.  அங்குள்ள வங்கி ஊழியர் உங்கள் வேலையைச் செய்ய மறுக்கும் போது அல்லது காரணமின்றி  காக்க செய்யும்போது நீங்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளலாம். அந்த நேரத்திற்கான உங்களது மற்ற பணிகள் கூட பாதிக்கப்படலாம். ஆனால் பணி நேரத்தில் உங்கள் வேலையைத் தவிர்க்கும் அத்தகைய ஊழியர்கள் மீது, அவர்களின் அலட்சியத்திற்காக உடனடியாக வழக்குத் தொடரலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதற்கு வாடிக்கையாளர் உரிமைகள் மற்றும் அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆம், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல வகையான உரிமைகளை வழங்கியுள்ளது. 


வங்கி வாடிக்கையாளர் உரிமைகள்


வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல உரிமைகள் இருப்பது குறித்து பொதுவாகவே அவர்கள் அறிந்திருப்பது இல்லை. தங்களின் உரிமைகள் பற்றிய விவரம் இல்லாததால் வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் கவனக்குறைவால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.  ஆனால் இதுபோன்ற ஒரு சூழல் உங்களுக்கு நேர்ந்தால், அந்த ஊழியரைப் பற்றி வங்கி லோக்பாலில் நேரடியாகப் புகார் செய்து பிரச்சனையைத் தீர்க்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வங்கி ஊழியர் உங்கள் வேலையை தாமதப்படுத்தினால், முதலில் வங்கி மேலாளர் அல்லது நோடல் அதிகாரியிடம் சென்று உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள். அப்படி அங்கும் தீர்வு காண முடியாவிட்டால், கவனக்குறைவாக செயல்படும் வங்கி ஊழியர்கள் மீது புகாரளிக்க வேறு சில வழிகளும் உண்டு.


புகாரளிப்பதற்கான வசதிகள்:


வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை குறை தீர்க்கும் எண்ணில் பதிவு செய்யலாம். உண்மையில், ஒவ்வொரு வங்கியிலும் வாடிக்கையாளர் புகார்களைத் தீர்ப்பதற்கு ஒரு குறை தீர்க்கும் மன்றம் உள்ளது. இதன் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு நீங்கள் எந்த வங்கியின் வாடிக்கையாளராக இருக்கிறீர்களோ அந்த வங்கியின் குறை தீர்க்கும் எண்ணை எடுத்து புகார் செய்யலாம். இது தவிர, வங்கியின் இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது வங்கியின் ஆன்லைன் போர்ட்டலிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


ஆன்லைனில் புகாரளிக்கும் வசதி


நீங்கள் ஊழியர்களின் கவனக்குறைவு சிக்கலை அனுபவித்திருந்தால் மற்றும் மேலே குறிப்பிட்ட அனைத்து முறைகளாலும் வழக்கு தீர்க்கப்படவில்லை என்றால், உங்கள் பிரச்னையை வங்கி குறைதீர்ப்பாளரிடம் நேரடியாகப் புகாரளிக்கலாம். இதற்காக உங்கள் புகாரை ஆன்லைனில் அனுப்பலாம்.


புகாரை பதிவு செய்ய https://cms.rbi.org.in என்ற இணையதளத்தில் உள்நுழைய வேண்டும் . பின் முகப்புப்பக்கம் திறக்கும் போது File A Complaint என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். CRPC@rbi.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் செய்யலாம் . வங்கி வாடிக்கையாளர் புகார்களைத் தீர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி 14448 என்ற இலவச எண்ணைக் கொண்டுள்ளது. சிக்கலைத் தீர்க்க அந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.