இன்று, சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 94வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடுமையாக குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய்:
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசியா நாடுகளில் (ஏமன்- சவுதி அரேபியா) தற்போது பதற்றமான சூழல் அதிகரித்து வருவதால், கச்சா எண்ணெயின் விலை பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த 17ம் தேதி நிலவரப்படி, சர்வதேச சந்தையில் இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 85.6 அமெரிக்க டாலராகும். இது, கடந்த 2014 ஆண்டிற்கு பிறகு, பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச உயர்வாகும். மேலும், மூன்றாவது காலாண்டில் ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலராக அதிகரிக்கக் கூடும் என்றும் ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
உதாரணமாக, கடந்த 2019-20ம் ஆண்டில் 32.2 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, மொத்த அளவில் வெறும் 27% ஆகும். இந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 111 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.68,743.95 கோடி. 2020 ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ. 92,773.42 கோடி ஆக இருந்தது
இறக்குமதி செலவு அதிகரித்தால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit) மேலும் மோசமடையக் கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரியத் தொடங்கும்.
கச்சா எண்ணெயின் உயர்வால், நாட்டின் பணவீக்கம் (தயாரிப்புச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக ) அதிகரிக்கும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ரெப்போ விகிதத்தை ஆர்பிஐ அதிகரிக்கும். இதன் மூலம், தொழில் நிறுவனங்கள் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கும். கடன் வாங்குவதை தொழில் நிறுவனங்கள் குறைத்தால், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி குறையத் தொடங்கும். உற்பத்தி, சேவை விவசாயம் என அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கக் கூடும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரியத் தொடங்கியதால், கடந்தாண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கும் குறிப்பிடத்தக்க முடிவை மத்திய அரசு எடுத்தது. மீண்டும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், நாட்டில் எரிசக்திப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும் , மீண்டும் கலால் வரி உயர்த்தப்படலாம். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது மிகப் பெரிய சிக்கலாக இருக்கும்.