டெண்டர்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு அளித்த முறைகேடு தொடர்பாக இரண்டு நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. அதன் அடுத்த கட்டமாக தற்போது  அவரின் வங்கிக்கணக்கை முடக்கம் செய்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் வங்கி கணக்கு முடக்கம் என்றால் ? எதற்காக ஒருவரின் வங்கி கணக்கு முடக்கப்படும்?


வங்கி கணக்கு முடக்கம் என்றால் என்ன?


ஒருவரின் வங்கி கணக்கு முடக்கம்  செய்யப்பட்டால் அவர் அந்த கணக்கிலிருந்து எந்தவித பரிவர்த்தனையும் செய்ய முடியாது. குறிப்பாக பணம் எடுக்கவோ, போடவோ அல்லது வேறு கணக்கு மாற்றவோ முடியாது. அத்துடன் காசோலை கூட கொடுக்க முடியாது. ஆக மொத்தத்தில் அவருடைய கணக்கில் முடக்கம் செய்யும் போது இருந்த அனைத்து பணமும் அப்படியே இருக்கும். 


வங்கி கணக்குகள் எப்போது முடக்கப்படும்?


வங்கி கணக்குள் முடக்கப்பட ஒரு சில காரணங்கள் உள்ளன. அவை:-



  • வங்கி கடன் வாங்கிவிட்டு அதை நீண்ட நாட்கள் நீங்கள் செலுத்தமால் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய வங்கி கணக்கை வங்கி முடக்கம் செய்யும். 

  • முறையாக வரி செலுத்தாத நபர்களின் வங்கி கணக்கும் முடக்கம் அதிகாரம் வங்கிகளுக்கு உள்ளது. நீங்கள் சரியாக வரியை செலுத்தும் வரை உங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும். 

  • மேலும் உங்களுடைய வங்கி கணக்கை கொண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆகியவை செய்தாலும் வங்கி கணக்குகள் முடக்கப்படும். 




காவல்துறை அல்லது சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை வங்கி கணக்கை முடக்குமா?


இந்தியாவில் உள்ள CrPC சட்டத்தின் பிரிவு 102-ன்படி காவல்துறையினர் விசாரணையின் போது ஒருவரின் வங்கி கணக்கு குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டது என்று உரிய ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் அதை முடக்க முடியும். அதேபோல் சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையின் போது ஊழில் ஈடுபட்டவரின் சொத்துகளை முடக்கும் போது அவருடைய வங்கி கணக்கையும் முடக்க முடியும். 


ஒருவேளை தவறாக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை முடக்கத்தில் இருந்து நீக்கலாம். அப்படி நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு தொகையையும் நீதிமன்றம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காவல்துறையினர்,லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆகியோர் உரிய ஆதாரங்கள் கிடைத்தப் பின்னரே ஒருவரின் வங்கி கணக்கை முடக்குவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:'பட வாய்ப்புத் தேடி சென்னை சென்ற எஸ்.பி.வேலுமணி' பல கோடிகளுக்கு அதிபதி ஆனது எப்படி? – முழு பின்னணி