TDS on FD interest: நிலையான வைப்புத்தொகை எனப்படும் FD வட்டி வருவாய் மீதான TDS கட்டணத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பிற்கான வழிகள்:
நிலையான வைப்புத்தொகை அதாவது FD, பொதுமக்கள் பலராலும் முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. நீங்கள் FD-யில் பணத்தை முதலீடு செய்த நிலையில், வட்டி வருவாய்க்கு விதிக்கப்படும் TDS அதாவது மூலத்தில் வரி கழிக்கப்படுவது குறித்து கவலைப்படுகிறீர்கள் என்றால், அந்த கவலை இனி வேண்டாம். ஏனென்றால் சில சிறப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வட்டி வருவாய்க்கு விதிக்கப்படும் TDS-ஐ நீங்கள் சேமிக்க முடியும்.
புதிய TDS விதிகளில் தளர்வு:
அரசாங்கம் TDS விதிகளை முன்பை விட சற்று எளிதாக்கியுள்ளது, இது FD செய்பவர்களுக்கு ஆதராவாக அமைந்துள்ளது. புதிய விதியின் கீழ், நீங்கள் 60 வயதுக்குக் குறைவானவராக இருந்தால், ஆண்டு வட்டி ரூ.50,000 க்கு மேல் இருந்தால் மட்டுமே TDS கழிக்கப்படும். இதற்குக் குறைவான வட்டி வருவாக்கு வரி கழிக்கப்படாது. மூத்த குடிமக்களுக்கு, அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இந்த வரம்பு ரூ.1,00,000 ஆகும். அத்தகைய சூழ்நிலையில், வட்டி இதை விடக் குறைவாக இருந்தால், அதற்கு எந்த வரியும் விதிக்கப்படாது.
TDS கட்டணத்தை தவிர்க்க வழிகள்:
வரிப் பதற்றம் இல்லாமல் உங்கள் FD வருமானத்தை அனுபவிக்க விரும்பினால், உங்கள் மொத்த வருமானம் FD வட்டியில் இருந்து மட்டுமே பெறப்பட்டு, அது ₹ 4 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், வங்கியில் ஒரு படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் TDS-ஐத் தவிர்க்கலாம். இந்தப் படிவங்கள் மூத்த குடிமக்களுக்கும், 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் வேறுபட்டவை. நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக (60 வயதுக்கு மேல்) இருந்தால், நீங்கள் வங்கியில் படிவம் 15H ஐ சமர்ப்பிக்க வேண்டும். இது FD வட்டியில் TDS கழிக்கப்படுவதைத் தடுக்கும். 60 வயதுக்குட்பட்டவர்கள் படிவம் 15G மூலம் வரியைச் சேமிக்கலாம். இந்தப் படிவத்தை ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்பு வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் FD-யின் முழு வட்டியையும் TDS கட்டண கழிப்பு இன்றி பெறுவீர்கள்.
படிவம் 15H மற்றும் 15G என்றால் என்ன?
படிவம் 15H என்பது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கும், அவர்களின் வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பை விடக் குறைவாக இருப்பவர்களுக்கும் பொருந்தும். இது சுய அறிவிப்பு ( Self Declaration) வடிவத்தில் வழங்கப்படுகிறது. இது அவர்களின் வைப்பு வருமானத்தில் எந்த TDS-ஐயும் ஈர்க்காது. மறுபுறம், நிலையான வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்கு அல்லது தொடர் வைப்புத்தொகைகளிலிருந்து உங்கள் வட்டி வருமானத்தில் TDS-ஐத் தவிர்க்க படிவம் 15G பயன்படுத்தப்படுகிறது. வரி விதிக்கக்கூடிய வரம்பை விடக் குறைவான வருமானம் கொண்ட 60 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு இது செல்லுபடியாகும்.