ITR Filing: திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல்:
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), 2023 - 2024 நிதியாண்டிற்கான காலதாமதமான வருமான வரி அறிக்கைகள் அல்லது திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதன்பட், டிசம்பர் 31, 2024 அன்றுடன் முடிவடைய இருந்த காலக்கெடு ஜனவரி 15, 2025 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31, 2024 என்ற வழக்கமான காலக்கெடுவிற்குள், ஏதேனும் காரணத்தால், ITR ஐத் தாக்கல் செய்ய முடியாத நபர்கள், டிசம்பர் 31, 2024க்குள் தாமதமான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே ஐடிஆர் தாக்கல் செய்து, அதில் ஏதேனும் மாற்றங்களுடன் மீண்டும் தாக்கல் செய்த நபர்கள், டிசம்பர் 31, 2024க்குள் திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த காலக்கெடுவை CBDT நீட்டித்துள்ளதால், இந்த இரண்டு வகையைச் சேர்ந்த வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய கூடுதலாக இரண்டு வாரங்கள் அவகாசம் பெற்றுள்ளனர். அதோடு, ரூ.5000 அபராதம் என்ற சிக்கலில் இருந்து விடுபடவும் கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தாமதமான ITR தாக்கல்
2023-24 நிதியாண்டிற்கான (FY 2023-24) ஜூலை 31 ஆம் தேதி வரையிலான வழக்கமான காலக்கெடுவைத் தவறவிட்ட தனிநபர் வரி செலுத்துவோர் ITR ஐத் தாக்கல் செய்ய தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். வருவாய் மதிப்பு ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் வரி செலுத்துபவர் தாமதக் கட்டணமாக ஆயிரம் ரூபாயும் & வருவாய் மதிப்பு ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருந்தால் தாமதக் கட்டணமாக ரூ.5,000-ம் செலுத்த வேண்டும். கூடுதலாக, வருமானத்தின் படி பொருந்தும் வருமான வரியும் செலுத்தப்படும்.
திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல்
வரி செலுத்துவோர் தவறான தகவல்களை தெரிந்தோ/தெரியாமலோ குறிப்பிடலாம் அல்லது தங்கள் வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது முக்கிய தகவல்களைச் சேர்க்க மறந்துவிடலாம். தவறுகளைச் சரிசெய்து அல்லது தகவல்களைச் சேர்ப்பதன் மூலம் திருத்தப்பட்ட ITR ஐ தாக்கல் செய்ய வருமான வரித்துறை அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது. இதனால், அதே நிதியாண்டில், திருத்தங்களுடன் இரண்டாவது முறையாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு, தற்போது கூடுதலாக இரண்டு வாரங்கள் கிடைத்துள்ளன
2023-24 நிதியாண்டில், இந்திய மக்கள் தொகையில் 6.68 சதவீதம் பேர் மட்டுமே
வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி டிசம்பர் 17 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், மொத்த இந்திய மக்கள் தொகையான 145 கோடியில், 2023-24 நிதியாண்டில், 8,09,03,315 பேர் மட்டுமே வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தனர். அவர்களில் சுமார் 4.90 கோடி பேர் ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தவில்லை. இந்தக் கணக்கீட்டின்படி நம் நாட்டில் 3.19 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர்.