Property Tax: உங்க பெயரில் சொத்து வரி இருக்கான்னு தெரியுமா? தமிழ்நாட்டில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
Property Tax: தனிநபர் பெயரில் சொத்துவரி நிலுவையில் இருக்கிறதா? என்பதை அறிவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Property Tax: சொத்துவரி நிலுவையில் இருந்தால், அதை ஆன்லைன் முறையில் செலுத்துவது எப்படி என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சொத்துவரி:
எந்தவொரு நிலம் அல்லது கட்டிடத்திற்கும் ஆண்டு மதிப்பு மற்றும் பிரிவு 134M மற்றும் பிரிவு 134N இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதத்தின் அடிப்படையில் உரிமையாளர் சொத்து வரி செலுத்த வேண்டும். மீறினால் அபராதம் உள்ளிட்ட சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதனை தடுக்கவும், குடிகமனின் கடைமையாகவும் வரி செலுத்த வேண்டியது அவசியமாகும்.
சொத்துவரி செலுத்துவது எப்படி?
உரிமையாளர் பெயரில் இருக்கும் சொத்து வரி விவரங்களை அறிய, பயனாளர்கள் சென்னை மாநகராட்சி அல்லது TN நகர்ப்புற EPAY போர்டல் போன்ற உள்ளூர் நகராட்சி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும். அதில், சொத்து வரி பிரிவிற்குள் நுழைந்து சொத்து விவரங்களை பதிவிட வேண்டும். உதாரணமாக சொத்து வரி ரசீதின் எண்ணை வழங்கி உள்நுழைய வேண்டும். பின்பு அதில் காட்டப்படும் வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைனிலேயே பொதுமக்கள், சொத்து வரியை பல்வேறு வழிகளில் செலுத்தலாம்.
சொத்துவரி - முழுமையான வழிகாட்டுதல்கள்
1. நிர்வாகத்தை அடையாளம் காணுங்கள்
- முதலில் எந்த நகராட்சி/மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உங்களது சொத்து அமைந்துள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்
- ஒவ்வொரு நகராட்சி/மாநகராட்சி நிர்வாகமும் வரி வசூல் உள்ளிட்ட சேவைகளுக்காக தங்களுக்கு என பிரத்யேகமான இணையதள முகவரியை கொண்டிருக்கின்றன
2. சொத்து வரி போர்ட்டலை அணுகுங்கள்:
- உங்களது நகராட்சி/மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள முவரி அல்லது TN நகர்ப்புற EPAY போர்டலை அணுகுங்கள்
- போர்டலில் ”சொத்து வரி” அல்லது ”ஆன்லைன் பேமண்ட்” என்ற ஆப்ஷன் இருந்தால் அதனை தேர்வு செய்யுங்கள்
3. சொத்து விவரங்களை கண்டறியுங்கள்:
உங்களது சொத்துகள் மீதான வரி விவரங்களை அறிய அதுதொடர்பான சில விவரங்களை நீங்கள் உள்ளிட வேண்டி இருக்கும். அதில்,
- அசெஸ்மெண்ட் நம்பர் - உங்கள் சொத்துக்கான பிரத்யேக அடையாள எண்
- பில் நம்பர் - சொத்து வரி ரசீதில் உள்ள எண்
- மண்டலம்/பிரிவு - சில நகராட்சி/ மாநகராட்சி நிர்வாகங்கள் மண்டலம் மற்றும் பிரிவு ஆகியவற்றை பயன்படுத்தும்
- உரிமையாளர் பெயர் - நில உரிமையாளரின் பெயரையும் உள்ளிட வேண்டி இருக்கும்
இந்த விவரங்களை நீங்கள் அறிந்திருக்காவிட்டால், பழைய ரசீதில் இடம்பெற்று இருப்பதை பயன்படுத்தலாம். அல்லது நகராட்சி / மாநகராட்சி நிர்வாகிகளை அணுக வேண்டி இருக்கும்.
4. நிலுவைத்தொகையை ஆராய்ந்து பணம் செலுத்துங்கள்:
- தேவையான விவரங்கள் அனைத்தையும் பதிவிட்ட பிறகு, தற்போது நிலுவையில் உள்ள சொத்து வரி விவரங்களை நீங்கள் திரையில் காணலாம்
- போர்டலிலேயே ”ஆன்லைன் பேமெண்ட்” ஆப்ஷனும் இடம்பெற்று இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்
- தொடர்ந்து பணம் செலுத்த கிரெடிட்/ டெபிட் கார்ட்கள், நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ மூலம் பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுங்கள்
- திரையில் தோன்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி பணம் செலுத்தும் நடைமுறையை பூர்த்தி செய்யுங்கள்
5. ரசீதை பதிவிறக்கம் செய்யுங்கள்:
- பணம் செலுத்தியபிறகு அதற்கான ரசீதை தரவிறக்கம் செய்து சேமித்துக்கொள்வதை மறக்காதீர்கள். எதிர்கால பயன்பாட்டிற்கு உதவக்கூடும்.
சொத்து வரி - கவனத்தில் கொள்ள வேண்டியவை:
சொத்து வரி செலுத்துவதற்கான கடைசி தேதியை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பொதுவாக ஆண்டிற்கு இரண்டு முறை வசூலிக்கப்படும் சொத்து வரி செலுத்த செப்டம்பர் 30 மற்றும் மார்ச் 31ம் தேதி கடைசி தேதிகளாகும். இதற்குள் செலுத்த தவறினால், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
சென்னை - ஆன்லைனில் சொத்து வரி செலுத்துவது எப்படி?
உதாரணமாக சென்னை மாநகராட்சியில் ஆன்லைனில் சொத்து வரியை செலுத்துவது எப்படி என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
- https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/ என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தின் உள்ளே நுழையுங்கள்
- உங்களது பில்லில் மண்டல எண், பிரிவு குறியீடு, பில் எண் மற்றும் துணை எண்ணை போன்ற விவரங்களை உள்ளிடவும்
- ”வரி செலுத்து” என்பதைக் கிளிக் செய்யவும்
- திரையில் செலுத்த வேண்டிய தொகை காட்டப்படும். மதிப்பீட்டு ஆண்டைத் தேர்வு செய்யவும்.
- பணம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்யவும்.
பில் செலுத்தப்பட்டவுடன் உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு கிடைக்கும். அதனை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.





















