ஆண்களோடு கல்வி கற்று, ஆண்களால் பயிற்றுவிக்கப்பட்டு, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வர்த்தகத் துறையில் சர்வதேச அளவில் கால்தடம் பதித்த சென்னையின் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையாகத் தனது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டுள்ளார் இந்திரா நூயி. 2006ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற அவர், தனது வாழ்க்கை வரலாற்றை My Life in Full என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். 313 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் அமெரிக்காவில் அவர் குடியேறும் போது நிகழ்ந்த அனுபவங்கள், வர்த்தகம் தொடர்பாக அறைகளுக்குள் நிகழ்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள், தனது பணியையும் குடும்ப வாழ்க்கையையும் சமமாக அவர் கருதியது, பெருந்தொற்று காலத்தில் பணியிடங்களில் நிகழும் மாற்றங்கள் முதலானவற்றை அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பேசியுள்ளார் இந்திரா நூயி. 


கடந்த 2019ஆம் ஆண்டு, பெப்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார் இந்திரா நூயி. 65 வயதான அவர் பதவி விலகுவதற்கு முன், பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்தப் புத்தகத்தில் அவர் பெப்சி நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு, Boston Consulting Group (BCG), Motorola, ABB ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியது முதலானவற்றோடு, குழந்தைகள் நலன், தனது குழந்தையின் பள்ளியில் நேர்ந்த நிறவெறிக் கொடுமை, தனது தாயுடனான உறவு முதலான பெர்சனல் பக்கங்களையும் இதில் வெளிப்படுத்தியுள்ளார்.



2007ஆம் ஆண்டு, தனது தாய் குறித்து இந்திரா நூயி பேசியிருந்தது வைரலானது. அதில் அவர் முதன்முதலாகப் `பெப்சி’ நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த தகவலைத் தனது தாயிடம் தெரிவித்த போது, அதனைக் கேட்டுக் கொண்ட பிறகு, அவரது தாய் அவரைப் பால் வாங்கச் செல்லுமாறு கூறியதாகத் தெரிவித்திருந்தார். அதனை எதிர்த்தபோது, இந்திரா நூயியின் தாய் அவரிடம் அவர் பெற்ற `கிரீடத்தை’ வீட்டிற்கு வெளியே போட்டுவிட்டு வருமாறு உத்தரவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். 


இந்தப் புத்தகத்தில் அவர் பணிக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான வசதி இந்தியாவில் இல்லாமல் இருப்பதும், அதனால் பெண்களின் பணி தடைப்படும் சூழலில் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு நிறுவனங்களின் ஆதரவு ஏன் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதோடு, அவர் பணியாற்றிய நிறுவனங்கள் அவருக்கு எப்படி ஆதரவு தந்து, அவரைக் கவனித்துக் கொண்டன என்பதையும் கூறியுள்ளார். பெப்சி நிறுவனத்தில் பெண்களே இல்லாத தலைமைப் பொறுப்பாளர்களின் அறைக்குள் தனது இருப்பை அவர் எப்படி நிலைநிறுத்தினார் என்பதையும், அவரது பணி எப்படி இருந்தது என்பதையும் இந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார் இந்திரா நூயி. 



இந்தப் புத்தகத்தைக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் எழுதி முடித்துள்ள இந்திரா நூயி பணி நேரங்களைப் பணியாளர்களின் தேவைக்கேற்ப வளைத்துக் கொள்ளலாம் என்பதை வலியுறுத்தி வருகிறார். இந்திரா நூயி தற்போது அமேசான் நிறுவனத்தின் தலைமை மன்றக்குழு உறுப்பினராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) முதல் பெண் தலைமைக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.