பேடிஎம் பேரண்ட் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேசன்ஸ் மறுசீரனைப்பின் ஒரு பகுதியாக அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்பாக என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிடவில்லை. 


ஒன்97 நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா ஏற்கனவே பணி நீக்கம் தொடர்பாக கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். அதில், நிறுவனம் தொழில் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தவும் செலவினங்களை குறைக்கவும் பணி நீக்கம் செய்வதற்கான முடிவை எடுப்பதாக தெரிவித்திருந்தார். இப்போது பணி ஆட்களை குறைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளது. 


இது தொடர்பான ஷர்மா தெரிவிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்களுக்கான செலவினம் அதிகரித்துள்ளதாகவும் தொழில்நுட்பம் மற்றும் நிதி துறைகளில் அதன் முதலீடு அதிகரித்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது. இதிலிருந்து ரூ.400-500 கோடி தொகை சேமிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 


கடந்த மார்ச் மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை பிரிவு பணியாளர்களின் எண்ணிக்கை 3,500 குறைக்கப்பட்டு 36,521 ஆக இருந்தது. விதிமுறை பின்பற்றவில்லை என்பதால் இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகளுக்கு தடை அறிவித்ததில் இருந்து ஒன்97 நிறுவனம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 


பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு வேறு வேலைக்கு செல்வதற்கு தயாராகும் காலத்தில் அதற்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளதாக ஒன்97 கம்யூனிகேசன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாயுப்பு தகவல்களை பணி நீக்க செய்த ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கொடுக்க வேண்டிய போனஸ் உள்ளிட்டவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதற்காக கடந்த மார்ச் 15ம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்ய, பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தடை விதித்தது. இதனால் பேடிஎம் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. 2024 ஜனவரி - மார்ச் மாத காலத்தில் இந்நிறுவனத்திற்கு ரூ.550 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், ஏ.ஐ. உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் நிறுவனத்திற்கு லாபம் ஈட்டும் நடவைக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே 6,300 பேரை கடந்த மே மாதம் பணி நீக்கம் செய்திருந்த்து. அதற்கு முன்பு பேடிஎம் நிறுவனம் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. இம்முறை எண்ணிக்கை குறிப்பிடாமல் பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பில் மாற்றம் ஏற்படவில்லை என்றால பணி நீக்கம் நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என்று துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.