பான், ஆதார், ஜிஎஸ்டி நடைமுறையில் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.  நாட்டில் வங்கி மற்றும் நிதித் துறையில் பல்வேறு புதிய விதிகள் புகுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் சாமான்ய மக்களின் வாழ்க்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. ஆகையால் என்னென்ன விதிகள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.


ஆதார் பான் எண் இணைப்பு:


ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. முன்னதாக இது ஜூன் 30 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டு வரும் 30 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தமுறை அடுத்த வாய்ப்பு அளிக்கப்படாது என்றும் ஆகையால் செப்டம்பர் 30க்குள் மெத்தனம் காட்டாமல் பான், ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.




புதிய ஜிஎஸ்டி விதிகள்:


சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் (GSTN) அண்மையில் விதி எண் 59(6) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஜிஎஸ்டிஆர்-1 பதிவு செய்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய விதியின்படி ஜிஎஸ்டி சந்தாதாரர் அவர் சப்ளை செய்யும் சரக்கு குறித்தோ அல்லது அவர் வழங்கும் சேவை குறித்தோ GSTR-1 படிவத்தில் புதிதாகத் தெரிவிக்க முடியாது. ஒருவேளை, அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஃபைல் செய்த GSTR-3B படிவத்தில் ரிட்டர்ன் தொடர்பாக பதிவு செய்திருந்தால் மட்டுமே GSTR-1 படிவத்தில் சரக்கு, சேவை விவரத்தைக் குறிப்பிட முடியும்.


பிஎஃப்..பில் என்ன புதுசு?


பிஎஃப் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 1, 2021, அதாவது இன்றைக்குள் பிஎஃப் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். அவ்வாறு இணைக்காவிட்டால் சந்தாதாரர்கள் தங்களின் இபிஎஃப் சலுகையைப் பெற இயலாது.
மேலும் பிஎஃப் கணக்குடன் ஆதார் மற்றும் யுஏஎன் எண்ணை இணைக்காவிட்டால், ஆதாரை சரிபார்க்காவிட்டால் இசிஆர் எனப்படும் எலக்ட்ரானிக் சலான் கம் ரிட்டர்ன் உங்கள் பிஎஃப் கணக்கில் பதிவு செய்யப்படாது. அப்படியென்றால் சந்தாதாரர்களின் கணக்கில் பணியமர்த்தும் நிறுவனத்தின் பிஎஃப் பங்களிப்பு வரவு வைக்கப்படாது.


கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம்:


இன்று, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் கண்டுள்ளது. ஜூலையில் சிலிண்டரின் விலை ரூ.25.50 உயர்த்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 18ல் சிலிண்டர் விலை மேலும் ரூ.18 ஏற்றப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.




ரிசர்வ் வங்கியின் பாசிடிவ் பே சிஸ்டம்: 


காசோலை பரிவர்த்தனையில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. காசோலை பரிவர்த்தனைகளில் நிதி மோசடிகள் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இதில் பாதுகாப்பு அம்சத்தைப் பலப்படுத்தும் விதமாக  ரிசர்வ் வங்கி பாசிடிவ் பே சிஸ்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதாவது, ரூ.50,000க்கும் மேற்பட்ட பணத்தை காசோலை மூலமாகப் பரிவர்த்தனை செய்யும் போது காசோலை வழங்கியவர் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். பயனாளியின் பெயர், பணம் செலுத்துவோரின் பெயர், எவ்வளவு தொகை, காசோலை எண், தேதி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். பொதுத் துறை வங்கிகள் பல இந்த நடைமுறையை ஏற்கெனவே பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் ஆக்சிஸ் வங்கி இந்த நடைமுறையை இன்று முதல் பயன்படுத்துகிறது. பாசிடிவ் பே சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்ட காசோலைகளை மட்டுமே ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கிறது.


பஞ்சாப் நேஷன் வங்கியின் புதிய விதிகள்:


பஞ்சாப் நேஷனல் வங்கி இன்று முதல் சேவிங்ஸ் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கிறது. புதிய வரியானது ஆண்டுக்கு 2.90% என்றளவில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்கள் என இருவருக்குமே பொருந்தும்.


கார் இன்சூரன்ஸ் கட்டாயம்:


சென்னை உயர் நீதிமன்றம், கார்களுக்கு பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸைக் கட்டாயமாக்கியுள்ளது. ஒவ்வொரு புதிய காருக்கும் ஐந்தாண்டுகள் இன்சூரன்ஸ் கட்டாயம். ஆனால், இந்த புதிய விதியால் கார்கள் விலையில் ஏற்றம் காணப்படும் என ஆட்டோமொபைல் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


பாரத் சீரிஸ் (BH-series)


போக்குவரத்து அமைச்சகமானது பாரத் சீரிஸ் (BH-series) என்ற புதிய நம்பர் ப்ளேட் விதியைக் கொண்டுள்ளது. இந்த புதிய வாகனப் பதிவு விதி மூலம், புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு பிஹெச் பதிவு பெற்றுவிட்டால் மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூட புதிய பதிவு கட்டாயமில்லை.


மேற்கூறிய புதிய நடவடிக்கைகளை அறிந்து அவற்றை பின்பற்றினால் பல நன்மைகளை அடையலாம்.