காலி மனை இடங்களை பதிவு செய்வதற்கான புதிய நடைமுறைகளை தமிழ்நாடு  பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. 


பதிவுத்துறை அறிவிப்பு:


காலி மனை இடங்களை பதிவு செய்வதற்கான புதிய நடைமுறைகள் தொடர்பாக, பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார்.  அதன்படி, மனை இடங்கள் குறித்த ஆவணங்கள் சார்பதிவாளர்கள் அலுவலகங்களுக்கு பதிவிற்கு வரும்போது அவ்விடங்களில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் கட்டடம் குறித்த தகவல்களை ஆவணங்களில் குறிப்பிடாமல் அதனை காலிமனையிடமாகவே பதியும் நிலை தொடர்வதாக புகார்கள் வருகின்றன. இது அரசுக்கு வரும் வருவாயை பாதிப்பதாக உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் புதிய அறிவுரை சார்-பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காலிமனை 41681 குறிப்பிட்டு பதிவுக்கு வரும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரஸ்தரபு இடத்தினை பதிவுக்கு முன்பாக புகைப்படம் எடுக்க வேண்டும்.  மேலும், இப்புகைப்படம் ஜியோ கோ ஆர்டினேட்ஸ் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் புகைப்படம் ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறை 16.8. 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது. காலிமனை என பதியப்படும் ஆவணங்கள் தொடர்பாக இந்த அறிவுரையைப் பின்பற்றாத சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏன் இந்த நடவடிக்கை:


 முந்தைய ஆவணங்களில் வீட்டுக் கடனுக்காக ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம் பதிவாகி இருந்தாலும், கள ஆய்வு கட்டாயம். காலி மனை பத்திரங்கள் பதிவுக்கு வரும்போது, முந்தைய ஆவணங்களில், கதவு எண், மின் இணைப்பு, குடிநீர், வடிகால் இணைப்பு எண், சொத்து வரி எண் குறிப்பிடப்பட்டு இருந்தால், கள ஆய்வு மேற்கொள்வது கட்டாயம். முந்தைய ஆவணத்தில் வீடு இருப்பது குறிப்பிடப்பட்டு, அது இப்போது இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், அங்கு கள ஆய்வு செய்வதும்m கட்டாயம். எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தின் புவியிட தகவல்கள், தேதியுடன் புகைப்படம் எடுத்து, களப்பணி அறிக்கையில் இணைக்க வேண்டும். 


மேற்குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை கடைபிடிக்காமல், கட்டடம் இருக்கும் இடத்தை காலி மனையாக பதிவு செய்யும் அலுவலர்கள் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரங்கள் தொடர்பான தணிக்கையிலும், இந்த விதிகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா என, பார்க்க வேண்டும். பொது மக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களுக்கு, இதை பதிவு அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.


குவியும் மாற்றங்கள்:


பத்திரப்பதிவு துறையில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் கூட, மோசடி பத்திரங்கள் குறித்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருந்தது. அதன்படி, புகார் குறித்து விசாரித்து மோசடி உறுதியானால்,  மாவட்ட பதிவாளரே அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம். இந்த விபரம் வில்லங்க சான்றிதழிலும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.