கடந்த 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்புத்துறையில் கால்பதித்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், பெருத்த ஆரவாரத்திற்கு மத்தியில் ஜியோ தொலைத் தொடர்பு சேவையை அறிமுகப்படுத்தியது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அளித்த சலுகை தொலைத் தொடர்பு சந்தையில் எந்த அளவுக்கு தாக்கத்தை செலுத்தியதோ,  அதே அளவுக்கு அரசியல் சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டு சென்றது ஜியோ. அந்நிறுவனத்தின் சிம்கார்டு விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றதே இந்த சர்ச்சைகளுக்கு காரணம்.  முகேஷ் அம்பானியின் இந்த வளர்ச்சிக்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் இன்று வரை தொடர ஜியோ வலுவான அடித்தளம் அமைத்து சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல. ரிலையன்ஸ் குழும வரலாற்றை எழுதும் போது மோடியின் பெயரை குறிப்பிடாமல் அக்குழுமத்தின் வளர்ச்சியை பற்றி  எழுத முடியாது என்ற நிலை உள்ளது.  ஆனால் நாம் தற்போது குறிப்பிடுவது நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அல்ல; ரிலையன்ஸ் ரீட்டைல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் மனோஜ் மோடியைத்தான். 


அம்பானியின் வலது கரம் 




ரிலையன்ஸ் என்ற பெயரை கேட்டதும் அக்குழுமத்தை தொடங்கிய திருபாய் அம்பானியையோ அல்லது அவர்களின் மகன்களான முகேஷ் மற்றும் அணில் அம்பானியோ உங்கள் நினைவுக்கு வரலாம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தூண்களில் ஒருவாராக விளங்கி முகேஷ் அம்பானியின் நம்பிக்கைக்குரிய வலது கரமாக விளங்கி வெளி உலகம் அறியாத நபரான மனோஜ் மோடியின் பங்கு ரிலையன்ஸ் குழுமத்தில் அளப்பரியது. முகேஷ் அம்பானியின் கனவு நிறுவனமான ஜியோவுக்கு வெறும் 6 வாரங்களில் ஒரு லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒற்றை ஆளாய் வேலை பார்த்தவர்தான் இந்த மனோஜ் மோடி. மனோஜ் மோடியின் இந்த செயல்தான் கடனில் தத்தளித்த ஜியோ நிறுவனத்தை  கரையேற்றியது. 


மூன்று தலைமுறை அம்பானிகளுடன் தொடர்பு 




மும்பையில் கெமிக்கல் எஞ்சினியரிங் படித்த முகேஷ் அம்பானியுடன் சகவகுப்பு தோழனாக படித்தவர்தான் மனோஜ் மோடி. 1980களில் திருபாய் அம்பானி பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தை தொடங்கிய போது, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது எம்பிஏ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனது தந்தை கட்டமைக்கும் நிறுவனத்திற்கு உறுதுணையாக இந்தியா வந்த முகேஷ் அம்பானிக்கு உறுதுணையாக வந்தவர்தான் மனோஜ் மோடி. திருபாய் அம்பானியில் தொடங்கி முகேஷ் அம்பானியின் தொழில் வாரிசுகளான அனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா ஆகியோருடன் தொழில் முறையாக இணைந்து பயணித்து வரும் மனோஜ் மோடியின் தேவை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எந்த அளவுக்கு தேவை என்பதை இதன் மூலமே தெரிந்து கொள்ளலாம். 


பேச்சுவார்த்தை நடத்துவதில் வல்லவர்


ரிலையன்ஸ் குழுமத்தின் கடினமான மனிதராக அறியப்படும்  மனோஜ் மோடி, மிகவும் அமைதியான நபராகவும், ஊடகங்களுடன் அரிதாக தொடர்பு கொள்ளும் நபராகவே அறியப்படுகிறார். அவரை பெற்றி விவரிக்கும் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத், ரிலையன்ஸ் நிறுவனத்தில் அவர் இவ்வுளவு அதிகாரத்தை பெற்றிருப்பதற்கு அவரது விஸ்வாசம் மட்டும் காரணமல்ல; அவரது புத்திசாலித்தனமான பேச்சுவார்த்தை திறன்கள் மூலம்தான் என தெரிவிக்கிறார். உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் எதிலும் பயிலாமல், கூர்மையான நுண்ணறிவையும், இந்திய சூழலில் நவீன தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வதற்கான திறனையும் மனோஜ் மோடி பெற்றுள்ளதாகவும் கோபிநாத் கூறுகிறார். 


ரிலையன்ஸுடன் ஃபேஸ்புக்கை கைக்கோர்க்க வைத்தவர்


கொரோனா உச்சத்தில் இருந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவில் 5.7 பில்லியன் டாலரை பேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்தது. அதுமட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்து அதன் மூலம் 13 பில்லியன் டாலரை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொண்டு வந்தற்கான பெருமை மனோஜ் மோடியையே சாறும். மிகவும் அரிதாக ஊடகங்களிடம் பேசும் மனோஜ் மோடி ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தக கொள்கை குறித்து பேசிய வார்த்தைகள் இவை, ’’ரிலையன்ஸ் நிறுவனத்தின் கொள்கை மிக எளிமையானது, எங்களுடன் பணிபுரியும் ஒவ்வொருவரும் சம்பாதிக்காத வரை நம்மால் நிலையான வணிகத்தை செய்ய முடியாது’’ என்பதுதான்.