இந்தியாவின் ஏற்றுமதியை சர்வதேச அளவில் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய வர்த்தக அமைச்சகம் ஏற்றுமதி ஊக்குவிப்பு மிஷனின் (EPM) கீழ் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இது உலகளாவிய சந்தையில் இந்தியப் பொருட்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், MSME நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும் உதவும்.
6 ஆண்டுகளுக்கு வட்டி மானியம்
ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய தேவைகளுக்காக MSME-கள் வாங்கும் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது இந்தத் திட்டம் 2025 முதல் 2031 வரை 6 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும், மேலும் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு சந்தை வட்டி விகிதத்தை விட 2.75% குறைவான வட்டியில் கடன் கிடைக்கும்.இதற்காக அரசு சுமார் ₹5,181 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல் வட்டி விகிதம் 'ரெப்போ' (Repo Rate) விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப இது தானாகவே மாற்றி அமைக்கப்படும்.
முன்பு போதிய சொத்து பிணையம் (Security) இல்லாத காரணத்தால் MSME-கள் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் இருந்தது. அதை மாற்ற புதிய வழிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது:
நிச்சயமற்ற கடன்: குறிப்பிடத்தக்க சொத்து பிணையம் அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதம் இன்றி வங்கிகளில் கடன் பெறலாம்.
இந்தத் திட்டம் CGTMSE மூலம் செயல்படுத்தப்படுவதால், வங்கிகள் குறைந்த உத்தரவாதத்துடன் கடன் வழங்க முன்வரும். இதனால் உற்பத்திச் செலவு குறைந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் வரி விதிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலும் இந்தியப் பொருட்கள் தடையின்றி ஏற்றுமதியாகும்.
என்ன பலன்கள்?
மத்திய வர்த்தக அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், வரும் 2025 முதல் 2031 வரையிலான ஆறு ஆண்டுகளுக்கு ஏற்றுமதி சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் நிதிச் சலுகைகளைப் பெறவுள்ளன. குறிப்பாக, சந்தையில் நிலவும் வட்டி விகிதத்தை விட 2.75% குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுவது நிறுவனங்களின் வட்டிச் சுமையை வெகுவாகக் குறைக்கும்.
அதோடு, கடன் பெறுவதற்காக வழங்க வேண்டிய சொத்து பிணயம் (Collateral) அல்லது மூன்றாவது நபர் உத்தரவாதம் போன்றவை இனி தேவையில்லை அல்லது மிகக் குறைந்த அளவில் இருந்தால் போதுமானது என்பது சிறு தொழில் முனைவோருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்தச் சலுகைகளின் இறுதி நோக்கம், இந்தியத் தயாரிப்புகளின் உற்பத்திச் செலவைக் குறைத்து, சர்வதேசச் சந்தையில் இந்தியப் பொருட்களைக் குறைந்த விலையில் அதிகப் போட்டியிடும் தரத்துடன் விற்பனை செய்ய வழிவகை செய்வதாகும்.