மீஷோ


ஆன்லைன் குரோசரி என்பது மிகப்பிரபலமாகி வருகிறது. ஆனால் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் பெரு நகரங்களை மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சிறு நகரங்களில் அவர்களின் பிஸினஸ் மாடல்  வெற்றியடைய முடியவில்லை. ஜொமோட்டோ நிறுவனமும் ஆன்லைன் உணவுப்பொருட்கள் விற்பனையை தொடங்க திட்டமிட்டது. ஆனால் தொடங்கவில்லை. ஆனால் குரோபர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தது.


ஆனால் மீஷோ நிறுவனம் பெரு நிறுவனங்கள் செய்யாத வேலையை செய்ய இருக்கிறது. Farmiso எனும் துணை நிறுவனம் மூலம் உணவுப்பொருட்கள் விற்பனை சேவையை தொடங்க இருக்கிறது. தற்போது சோதனை அடிப்படையில் கர்நாடகத்தில் உள்ள சிறு நகரங்களில் இந்த சேவை செய்யப்பட்டுவருகிறது. இதன் மூலம் ஆனலைன் குரோசரி மாடலில் பெரும் மாற்றம் வரும் என மீஷோ கருதுகிறது. குறைந்தபட்சம் எவ்வளவு தொகையையும் ஆர்டர் செய்யலாம் எனும் சோதனை நடந்துவருவதால் மற்ற முன்னணி நிறுவனங்கள் இலவச டெலிவரிக்காக குறைந்த பட்ச ஆர்டர் தொகையை குறைத்திருக்கின்றன அல்லது நிறுத்தி இருக்கின்றன. ஆன்லைன் குரோசரியில் ஈடுபடுவதற்கு மீஷோவின் பிஸினஸ் மாடலும் முக்கியம்.


2015-ம் ஆண்டு ஐஐடி டெல்லியில் படித்த இரு நண்பர்கள் இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். பேஷ்நியர் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த ஆப் மூலம், நகரில்  உள்ள கடைகளில் உள்ள ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும்.  ஸ்விக்கி செய்வதுபோல செய்வதுதான் திட்டம். ஆனால் இந்த நிறுவனம் பெரிதாக வளரவில்லை. அப்போது அருகில் உள்ள பேஷன் கடையை ஆப்-ல் இணைப்பதற்காக  சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த கடையே பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் புதிய டிசைன்களை அப்லோடு செய்து, ஆர்டர் பெற்றுவந்தது. அதில் இருந்து உருவானதுதான் மீஷோ. அதுவரை இ-காமர்ஸ் என்பது பிரபலமாக இருந்தது. மீஷோவுக்கு பிறகு சோசியல் காமர்ஸ் என்பது பிரபலமானது.




இந்தியாவில் அனைவருக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு போதுமான மூலதனம் இல்லை. தற்போது இருக்கும் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் முதலீடு இல்லாமல் வர்ச்சுவல் கடை திறக்க முடியுமா என்னும் யோசனையில் உருவானதுதான் மீஷோ. மீஷோ என்றால் என்னுடைய கடை என்று அர்த்தம்.


மீஷோவில் நிறைய விற்பனையாளர்கள் இருப்பார்கள். நீங்கள் உள்ளுக்கு தேவையான பொருட்ளை தேர்ந்தெடுத்து, நீங்கள் உருவாக்கி இருக்கிற கம்யூனிட்டியில் விளம்பரம் செய்யலாம். பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் ஆப் மூலம் குழுக்கள் உருவாக்கி அதன் மூலம் விளம்பரம் செய்யலாம். வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்தால், விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி விடுவார்கள். விர்ச்சுவல் ஸ்டோர் வைத்திருப்பவர்களுக்கு அதற்கு உண்டான பணம் கிடைத்துவிடும். தவிர நீங்கள் எந்த ஒரு பொருளையும் முதலீடு செய்து ஸ்டாக் வைத்திருக்க தேவையில்லை. உங்களுக்கு தேவையான பொருள் இருக்கும். அதனை விற்றால் மட்டுமே போதும்.


தற்போது இந்த தளத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ளையர்கள் உள்ளனர். 1.7 கோடி ரீசெல்லர்கள் உள்ளனர். இதில் 1.5 கோடிக்கு மேல் பெண்கள். 80 சதவீதத்துக்கு மேலான விற்பனை 2-ம் கட்டத்துக்கு கீழ் இருக்கும் நகரங்களில் இருந்து வருகிறது.


4.9 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு


கடந்த ஐந்து மாதங்களில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு  இரு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் பேஸ்புக், பிகேபிடல், சாப்ட்பேங்க், செக்யோயா கேபிடல் எலிவேஷன் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. கூகுள் நிறுவனமும் இதில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.




ஆன்லைன் உணவுப்பொருட்கள் விற்பனை


தற்போது 4,800 நகரங்களில் சுமார் 26,000 பின் கோடுகளில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. இதுவரை பேஷன் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே விற்றுவந்த மீஷோ, இந்த நெட்வொர்க்கை குரோசரிக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. பிக் பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்களால் பெரிய நகரங்களில் மட்டுமே வெற்றிகரமாக செயல்பட்டுவந்த நிலையில் சிறு நகரங்களுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் மீஷோ ஏற்கெனவே சிறு நகரங்களில் ஒரு நெட்வொர்க்கை வைத்திருப்பதால், அந்த நெட்வொர்க்கில் உணவுப்பொருட்கள் விற்பனை எளிதாக இணைக்க முடியும்.


முதல் கட்டமாக ஓர் ஆண்டுக்குள் 200 நகரங்களில் இந்த சேவையை தொடங்க திட்டமிட்டிருக்கிறது. சிறு குழுக்களுக்குள் விற்பனை செய்ய முடியும் என்பதால் ஒவ்வொரு ஆர்டரிலும் வருமானம் சாத்தியம் என நிறுவனம் கருதுகிறது. சமீபத்தில் இந்த விரிவாக்கத்துக்கு தேவையான நிதியும் மீஷோவுக்கு கிடைத்துவிட்டது என்பதால் அடுத்த சில ஆண்டுகளில் குரோசரி சந்தையில் பெரிய மாற்றம் நிகழக்கூடும்


இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியாவில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தவும் மீஷோ திட்டமிட்டிருக்கிறது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மீஷோ ஏற்படுத்தி இருக்கிறது.