இந்தியாவில் பண்டிகை காலம் களை கட்டத் தொடங்கிவிட்டது. ஆம் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஆஃபர்களை அள்ளித் தெளித்து விற்பனைகளைத் தொடங்கியுள்ளன. அமேசான் கிரேட் இண்டியன் சேல், ஃபிளிப்கார்ட் சேல், மீஷோ சேல், ஆஜியோ சேல் என சேல்கள் அணல் பறக்கின்றன.
இந்நிலையில் மீஷோ ஆன்லைன் சேல் முதல் நாளிலேயே களை கட்டியுள்ளது. முதல் நாள் முடிவில் 87.6 லட்சம் ஆர்டர்கள் வந்துள்ளது.
மீஷோ சமீபகாலமாகவே விளம்பர உத்திகளை புதிது புதிதாக மாற்றி அமைத்தது. இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. பொதுவாக பண்டிகை நெருங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரங்களை ஆயுதமாகக் கையில் எடுக்கும். ஆனால் மீஷோ ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் லேட்டஸ்டாக இணைந்த நிறுவனம் என்பதால் சற்று முன்னதாகவே விளம்பரங்களில் கவனத்தை குவித்தது.
சரியான விலை, குறைவான விலை என்ற டேக் லைனுடன் விளம்பரத்தை ஆரம்பித்து இப்போது பண்டிகை காலத்தில் ஊருக்கு ஏற்ற மாதிரி சினிமா பிரபலங்களுடன் மெகா சேல் ஆஃபர் ஆட் செய்தது. தமிழில் கார்த்தி, த்ரிஷா ஆட் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேற்று செப் 23 ஆம் தேதி மீஷோ மெகா சேல் ஆரம்பித்த நிலையில் முதல் நாளில் 87 லட்சம் ஆர்டர் பெற்றுள்ளது. இவற்றில் 85% ஆர்டர்கள் டயர் 2, 3 மற்றும் 4 நகரங்களில் இருந்து வந்துள்ளது. மீஷோ மெகா ப்ளாக்பஸ்டர் சேல் ரெக்கார்ட் படைத்துள்ளது என்று அந்நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்த மீஷோ அறிக்கையில் நாங்கள் எங்கள் தளத்தில் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் 6.5 கோடி பொருட்களை பட்டியலிட்டிருந்தோம். எங்களின் இலக்கு ஆன்லைன் விற்பனையில் ஒரு ஜனநாயகத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான். அனைத்து தரப்பினராலும் ஆன்லைனில் பொருட்களை வாங்க இயலும் சக்தியைத் தர வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி, பொருட்களைப் பட்டியலிட்டு வெற்றி கண்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் சேலை முதல் அனலாக் வாட்ச் வரை. நகைகள் முதல் மொபைல் கேஸ் வரை, மெத்தை விரிப்பு முதல் ப்ளூடூத் ஹெட்செட் வரை எல்லாவற்றையும் வாங்கி மகிழ்கின்றனர். முதல் நாள் விற்பனையில் ஃபேஷன், ப்யூட்டி, பெர்சனல் கேர், ஹோம் அண்ட் கிச்சன், மின்னணு உபகரணங்கள் விற்பனை டாப் செல்லிங் கேட்டகிரியில் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீஷோ பிசினஸ் பிரிவு சி.எக்ஸ்.ஓ. உத்ரிஷ்ட குமார் கூறுகையில், ஹைபர்லோக்கல் பொருட்களையும் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம். அதேபோல் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஆன்லைன் விற்பனைத் தளத்தில் பங்களிப்பில் ஊக்குவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
வாங்கலாமா..? வேண்டாமா..? என்ற சந்தேகத்தைப் போக்கும் வகையில் நம்பிக்கை ஊட்டும் விளம்பரங்களைக் கொடுத்த மீஷோ இந்த பண்டிகை காலத்தில் முதல் நாளிலேயே 87 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்று அசத்தல் ஆரம்பத்தைப் பதிவு செய்ததோடு போட்டியாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.