விவசாயிகளுக்கு கரீஃப் பருவத்திற்கான பயிர்க்கடன் வழங்குவதற்கு CIBIL மதிப்பெண்ணைக் கட்டாயமாக்கினால், FIRகளை எதிர்கொள்ள நேரிடும் என்று வங்கிகளை மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிர அரசு - வங்கிகள் கூட்டம் :
மும்பையில் மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் மற்றும் ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேசிய வங்கிகள் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளால் தகுதியுள்ள பல விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மறுக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எச்சரிக்கை விடுத்த பட்னாவிஸ்:
அப்போது பேசிய மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், வங்கிக் கிளைகளுக்கு பயிர்க் கடன்களுக்கு, CIBIL மதிப்பெண்கள் தேவையில்லை என்று RBI பிரதிநிதிகள் உறுதியளித்த போதிலும், விவசாயிகள் பெரும்பாலும் இந்த மதிப்பெண்களைக் கேட்கிறார்கள் என்று ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார். "ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோன்ற உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது, ஆனால் வங்கி கிளை அதிகாரிகள் விவசாயிகளிடம் CIBIL மதிப்பெண்ணைக் கேட்கிறார்கள். அவர்களுக்கு பயிர்க் கடன் மறுக்கப்படுகிறது. எனவே, RBI வழிகாட்டுதல்களை மீறினால், FIR பதிவு செய்யப்படும் என அனைத்து வங்கிகளையும் நான் எச்சரிக்கிறேன்," என்று தெரிவித்தார்.
”கடன் வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் - ஷிண்டே”
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவிக்கையில், தட்பவெப்ப நிலை உள்ளிட்ட சூழல் காரணமாக சவால்களை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு வங்கிகள் ஆதரவாக இருக்க வேண்டும். "விவசாயிகளின் கவலைகளுக்கு இடமளிக்கும் வகையில் வங்கிகள் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவும், பயிர்க்கடன் வழங்கவும் வங்கிகள் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.