ஒவ்வொரு மாதந்தோறும் முதல் நாளில் வணிகம் மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அந்த அறிவிப்பில் எதாவது விலை குறைப்பு உள்ளதா என்று மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பது வழக்கம். அந்தவகையில் செப்டம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 96 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 2045 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஓட்டல்கள் மற்றும் பிற சமையல் தொடர்பான தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எந்தவித மாற்றமும் இன்றி 1,068 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 6ஆம் தேதி 19 கிலோ எடை சிலிண்டரின் விலை 2177 ரூபாயாக இருந்தது. இந்த விலை ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி 2141 ரூபாயாக குறைக்கப்பட்டது. அதன்பின்னர் செப்டம்பர் மாதம் 96 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 2045 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை பொதுவாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், ஜூலை 6ஆம் தேதிவீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 1068.50 ரூபாயாக சிலிண்டர் விலை உயர்ந்திருந்தது. தற்போது அந்த விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.
முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. அதேபோல் கொரோனா ஊரடங்கில் இருந்தே பலருக்கும் மத்திய அரசின் சிலிண்டர் மானியம் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் சிலிண்டருக்கு முழு விலையையும் சாமானிய மக்கள் கொடுக்க வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
இதற்கிடையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் 9 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூபாய் 200 மானியமாக வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது சமூக உள்ளடக்கத்திற்கான பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிரபலமான முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது.